பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 85


3 - வது. ஜெனரல் மார்ட்டீன்.
4 - வது. சர். உல்லியம் ஜோன்ஸ்.
5 - வது. மிஸ்டர் கோல்புருக்

- 1:45 ; ஏப்ரல் 22, 1908 –

இவ்வகையாகக் காசியில் அந்தந்த துரைமக்கள் கையில் எந்தெந்த சங்கதிகள் அடங்கிய பாகங்களோ அவரவர்கள் கொடுக்க அவைகள் யாவையும் ஒன்றுசேர்த்து பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் கண்காட்சி கூடத்தில் மேற்கூறியுள்ள துரைமக்கள் வைக்கும் வரையில் இவ்வேதங்களானது இன்ன மடத்தில் இருக்கின்றது இனிய கலாசாலையில் இருக்கின்றதென்றேனும் இன்ன ஆச்சாரியாரிடத்தில் இருக்கின்றதேனும் இனிய குருவிடம் உள்ளதென்றேனும் ஓர் வதந்தியும் கிடையாது.

ஓர் கடவுள் வேதத்தை பிரம்மாவிடம் கொடுத்தார் என்றும், பிரம்மா முநிவர்களிடம் கொடுத்தார் என்றும், முநிவர்கள் மாணாக்கர்களிடம் கொடுத்தார் என்றும் பாயிரத்தில் வரைந்திருக்கின்றார்கள்.

கடவுளால் கொடுக்கப்பெற்ற வேதத்தை இருக்கு வேதத்தில் எவ்வகையாக எழுதியிருக்கின்றதென்றால் அனந்தங் கதைகள் விசுவாமித்திரராலும், பரத்துவாசராலும், வசிஷ்டராலும், கிரதசமதராலும், வாமதேவராலும், புதனாலும், அத்திரியினாலும், அகஸ்தியராலும், காசியபர், பராசர், கௌதமர், கண்ணுவர், பிரகஸ்பதி மற்றும் அனந்த அரசபுத்திரர்கள் வேதங்களிலுள்ள அனந்தமாயிரக் கீதைகளை வரைந்திருக்கின்றார்களாம்.

இத்தனைப்பெயர்கள் கூடி எழுதியுள்ள வேதத்தை ஆதியில் சூரியனுக்குத்தான் வெளிப்படுத்தியதாக யசுர்வேதத்தில் எழுதியிருக்கின்றது. இவ்வகையான சூரியனுக்கு வெளிப்படுத்திய வேதத்தை சாமவேதம் என்றும், ருக்குவேதம் என்றும், எஜுர் வேதம் என்றும், அதர்வண வேதம் என்றும் பிரித்துப் பெயர்கொடுத்தவர் வியாசர் என்று முகவுரையிற் கூறி இருக்கின்றது. இதே வியாசர் புராணங்களையும் எழுதியிருக்கின்றார். பாரதத்தையும் எழுதியிருக்கின்றார். சங்கராச்சாரிக்குப் போதிக்கவும் வந்திருக்கின்றார். தற்காலம் எங்கிருக்கின்றாரோ தெரியவில்லை.

இருக்குவேதத்தில் பூலோகத்திற்கு ஓர் கடவுள், புவர் லோகத்திற்கு ஓர் கடவுள், சுவர் லோகத்திற்கு ஓர் கடவுள், அவர்கள் பெயர்கள் யாதெனில் - அக்கினி, வாயு, சூரியன்.

வேத நிகண்டின் அட்டவணைகளோடு முதலில் அக்கினிக்கே ஏகார்த்தப் பலப்பெயர்களை எழுதியிருக்கின்றார்கள்.

அக்கினியையே பெரும்பாலும் தேவதையாகக் கொண்டாடுகிறவர்கள் பாரிசுசாதியோர் ஆதலினாலும், இவ்வேதங்களில் உள்ள அரைபாகசங்கதிகளை ஜெயபுரத்தில் கர்னல் பேர்லியர் துரையவர்களுக்கு தாராஷ்கோ என்னும் பாரீசு சாதியோர் ஒருவரால் பாரீசுபாஷையில் மொழி பெயர்த்துக் கொடுத்துள்ள படியினாலும் வேதங்களின் அரைபாகம் பாரீசு சாதியோருக்கு சம்மந்தப்பட்ட சரித்திரங்களாக விளங்குகின்றது.

பாரிசீகர் சரித்திரங்களையே முற்றுமெழுதி விட்டால் இத்தேசத்திலுள்ள பௌத்தர்கள் மறுப்பார்கள் என்று எண்ணி புத்ததன்மங்களில் வரைந்துள்ள முக்கியப் பெயர்களாகும், இந்தியர், கௌதமர், சங்கறர், வாமனர், காசிபர், அஜாத சத்துரு மற்றுமுள்ளப் பெயர்களையும் அவரவர்கள் சரித்திரங்களில் சிலதைக் கூட்டியுங் குறைத்தும் எழுதிவிட்டார்கள்.

இந்த வேதங்களை இவர்கள் எழுதிய காலம் யாதென்பாராயின் ஜெநநமே ஜெயன் அஸ்வமேதயாகத்தை முடித்தவிஷயத்தை இவ்வேதங்களில் எழுதியிருக்கின்றபடியால் ஜெநநமே ஜெயன் சரித்திரமாகும் பாரதத்திற்குப் பின்பே எழுதியிருத்தல் வேண்டும். அல்லது யசுர் வேதத்துள் புராணத்துள் குறித்துள்ள வராக அவதாரத்தை எழுதியுள்ளதினாலும், பாயிரத்தில் புராணத்திலுள்ள மச்சவதாரத்தை எழுதியுள்ளதினாலும், புராணகாலங்களுக்குப் பின்பே இவ்வேதங்கள் எழுதியிருத்தல் வேண்டும்.