பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அவிரோத வுந்தியார்

அறுவகை சமயத்தரையு மெய்ப்பொருளு / மறுபத்துநாலு நற்கலையு
மறுவறப்பயின்று மாசறத்திகழு / மறிஞரா மவர்களே யெனினுங்
குறைவறத் தன்னைக் கொடுத்திடுங் குரவன் / குரை கழல் புனைந்தவ ரன்றேல்
பறையர் மற்றவரை பறையரே யெனினு / மருளுடையவர் பரம்பரரே.

சிவவாக்கியர்

பறைச்சியாவதேதடா பாணத்தியாவதேதடா
விறைச்சிதோ லெலும்பிலே யிலக்கமிட்டிருக்குதோ
பறைச்சிபோகம்வேறதோ பாணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பாணத்தியும் பரிந்துபாருமும்முளே.

திருவாசகம்

வேதமொழியர் வெண்ணீற்றர் செம்மேனியர் / நாதப்பறையினரென்னே என்னும்
நாதப்பறையினர் நான்முகன் மாலுக்கு / நாதரின்னாதனாரன்னே என்னும்.

ஞானவெட்டி

விட்டகுறைவருமளவி முபதேசங்காண் / மெய்யுடலந்தளர்ந்து கலை மேலுநோக்கி
தட்டழிந்து விழும்போது வோதிவைத்த / சாத்திரங்களொன்றேனு நினைக்கப்போமோ
எட்டு ரண்டு மறியாதார் குருக்களாமோ / என்னையுமே பறையனென்று தள்ளலாமோ
மட்டமரும்பூங்குழல் வாலாம்பிகைப்பெண் / வங்கிஷத்தி லுதித்த சம்பவனு னானே.

வேஷப் பிராமணர்களால் பௌத்தர்களைப் பறையரென்று தாழ்த்திவந்தப் பெயரை விவேகிகள் கண்டித்து வேஷப்பிராமணர்ப் பொய்ப் போதங்களை விளக்கியவற்றுள் சொற்ப விவேகிகள் தெரிந்துக்கொண்ட போதிலும் கல்வியற்றப் பெருங்குடிகளைத் தங்கள் வழிப்படுத்திக் கொண்டு பறையரென்னும் பெயரை பலவகையாலும் பரவச்செய்துவந்தார்கள்.

அதாவது பறைப்பருந்து பாப்பாரப் பருந்தென்றும், பறைமயினா பாப்பார மைனாவென்றும், பறைப்பாம்பு பாப்பாரப்பாம்பென்றும், இப் பெயரை மறவாமல் பரவச் செய்ய வேண்டிய உபாயஞ் செய்தார்கள். நாயின் பெயரில் பறைநாயென்று மட்டும் கூறவைத்துப் பாப்பார நாயென்னும் வார்த்தையை வழங்காமல் நிறுத்திக் கொண்டார்கள்.

ஏனென்பீரேல் பாப்பார நாயென்றால் தங்களை இழிவுபடுத்து மென்பதேயாம்.

இதுவுமன்றி வேஷப்பிராமணர்கள் கல்வியற்றக்குடிகளை ஏமாற்றி பிச்சை இரக்கப்போகும் காலங்களில் எல்லாம் இப்பறையனென்னும் வார்த்தையைப் பரவச்செய்தற்கு பொய்சொன்னால் நான் ஒருபறையன், கொடாவிட்டால் நான் ஒரு பறையன் என்று வழங்கும் வார்த்தைகளையும் கற்பித்துவிட்டார்.

அக்கல்வியற்றக் குடிகளோ பொய்யே ஒருருவாகக் கொண்டிருந்த போதிலும், திருட்டே ஓருருவாகக் கொண்டிருந்தபோதிலும், வஞ்சகமே ஓருருவாகக் கொண்டிருந்தபோதிலும், மோசமே ஓருருவாகக் கொண்டிருந்த போதிலும் தங்களுடைய துற்செயல்களையும் துற்குணங்களையும் கவனியாமல் பறையன் என்னும் மொழியை மட்டிலும் இழிவாக உபயோகித்து வருகின்றார்கள்.

இதுவுமன்றி பௌத்தமார்க்கத்தைத் தழுவிய நந்தனென்னும் ஓரரசன் இருந்தான். அவன் பெயரைக் கொண்டே நந்தனென்னும் பறையனிருந்ததாகப் பொய்ப்புராணத்தையும் பொய்க்கீர்த்தனையும் ஏற்படுத்திப் பரவச்செய்ததுமன்றி பொய்ச்சொல்லா அரிச்சந்திரன் கதை என்னும் பொய்ப்புராணம் ஒன்று ஏற்படுத்தி புத்தர் வம்மிஷ முதியோன் வீரவாகுச் சக்கிரவர்த்தியை சுடலை காக்கும் பறையனென்று ஏற்படுத்தி கூத்துகளாடி தமிழ்நாடெங்கும் பரவச் செய்தார்கள்.

கபிலர் இயற்றினாரென்னும் பொய் அகவலொன்று ஏற்படுத்தி அதிலும் பறையன் என்னும் பெயரைப் பரவச்செய்தார்கள். சுத்தமாகியத் திரிக்குறளில் அசுத்தவேஷப் பிராமணன் பொய்க்கதையை எழுதி அதனிலும் பறையன் என்னும் பெயரைப் பரவச் செய்தார்கள்.

காரணம் யாதென்பீரேல் ஐயர் வார்த்தையை ஐயம் பெருமாள் வார்த்தை போல் எண்ணிக் கொள்ளும் கல்வியற்றவர்களாதலின் தங்களிடமுள்ள நீச்சச் செயல்களைக் கவனியாமல் பறையன் என்னும் வார்த்தையை மட்டும் பரக்க உபயோகிக்கின்றார்கள்.