பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 89


இதுவுமன்றி பௌத்தர்களை நசிக்கிவிட்டால் பௌத்த மார்க்கம் தானே நசிந்துவிடும். அப்போது நம்முடையப் பிராமண வேஷங்களும் பொய்வேதப் புரட்டுகளும் நிலைத்து நாமும் சிறப்படைந்து விடலாம் என்று எண்ணி பௌத்தர்களை சுத்தசலங்களை மொண்டுகுடிக்கவிடாமலும் வண்ணார்களை வஸ்திரம் துவைக்கவிடாமலும் இடுக்கங்கள் செய்துக் கொண்டு வந்ததுமன்றி பண்ணை வேலைச் செய்துவந்தவர்களை ஒருநாள் முழுவதும் வேலைவாங்கி அரைவயிறு கஞ்சேனுஞ் சரிவரக் கொடுக்காமல் எலும்புந் தோலும் விகாரரூபமுங் காணவைத்துக் கொண்டு அன்னியதேசங்களிலிருந்து இவ்விடம் வந்து குடியேறியுள்ள மகமதியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இவர்களைக் காண்பித்து இவர்கள் தாழ்ந்த சாதிபறையர்கள் இவர்களை நாங்கள் தீண்டுகிறதுமில்லை அருகில் சேர்க்கிறதும் இல்லை என்று சொல்லி அவர்களையும் அருவெறுக்கச் செய்து வேஷபிராமணர்களே இத்தேசத்துள்ளவர்களுக்கு பெரிய சாதிகள் என்று சொல்லிக் கொண்டு நூதனமாகக் குடியேறியவர்களிடஞ் சென்று பாஷைகளில் ஏதேனும் கற்பிக்கப் போனபோதிலும் இப்பறையனையே முந்தி இழிவடையக் கூறி பின்பு மற்ற போதகங்களைச் சொல்லிவருவது வழக்கமாயிருந்தது.

இத்தகையக் குறூர செயல்களினால் பௌத்த கூட்டத்தோர் யாவருஞ் சுகநிலை தவறிக் க்ஷீணதிசை அடைந்திருந்தபடியால் நூதனமாகக் குடியேறியவர்களும் இவர்களை அவமதித்து வேஷப்பிராமணர்களால் பறையன் என்று அவமதிக்கப்படும் காரணங்களை விசாரிக்காமலும் இதன் விவரங்களைத் தெரிந்துக் கொள்ளாமலும் வேஷபிராமணர்களின் தந்திர சொற்களை மேற்கொண்டு இந்துதேசத்தோர் வேதம் யாதென்றுக் கேட்க ஆரம்பித்ததின் பேரில் பௌத்ததன்மத்தைச் சார்ந்த வேதங்கள் யாவும் விளங்காமல் வேஷப்பிராமணர்கள் வேதம் வெட்டவெளியாக விளங்கியது. - 1:48; மே 13, 1908 – யாதெனில் இந்துக்கள் வேதங்களை அறிய வேண்டும் என்று அவாக்கொண்டு தேடிய கர்னல் போலியர், சர் ராபர்ட் சேம்பர், ஜெனரல் மார்ட்டீன், சர் உல்லியம் ஜோன்ஸ், மிஸ்டர் கோல்புருக் இவர்களுக்கு பலப்பெயர்களால் ஓலைகளில் எழுதிக் கொடுத்து இவைகள் தான் எங்கள் வேதங்கள் என்று கூறியதுமன்றி, இத்தகைய வேதங்களை எழுதியவர்களின் சிரேஷ்ட உற்பவத்தை மநுஸ்மிருதி என்னும் நூதன சாதி உற்பவ நூலில் வரைந்து வைத்தார்கள்.

ரிஷி பஸ ருங்கோம் ருகோஜாத / கௌசிகோகாதிநந்தன
ஜம்புகோ ஜம்புகோத்பத்தி / கௌதமோ கௌதசம்பவ
வால்மீகோ பரோத்பத்தி / அகஸ்திய கும்பகம்பவ
மியாசோலுப்த சம்பூதோ / வசிஷ்டா வூர்வசிசுத
நாரதோப் சகிபுத்திரோ / கௌண்டன்யோ முண்டகிசுத்
மதங்கஸ்ய மதங்கஸயாத் / மாண்டவ்யோ மண்டுகிசுத
சாங்கியாசம்ச சம்பூதோ / கார்க்கேயோ கார்த்தவசுத
சுநகிகற்ப சம்பூதோ / சௌனகாதி மஹாரிஷி.

இதன் சுருக்கமாவது தவளை வயிற்றிலும், நாயின் வயிற்றிலும், நரியின் வயிற்றிலும், கழுதையின் வயிற்றிலும், மான் வயிற்றிலும், பசுவின் வயிற்றிலும், மனிதர்கள் பிறந்து இவ்வேதங்களை எழுதினார்கள் என்பதேயாம்.

இதுவுமின்றி இவ்வேதத்தை ஓரசுரன்கொண்டுபோய் சமுத்திரத்தில் ஒளித்து வைத்ததை இவர்கள் கடவுள் போய் கொண்டுவந்தார் என்று கூறியிருக்க அது ஒரு கட்டும் ஓருருவுமின்றி பலர்கள் எழுதிகொண்டு ஐந்து துரைமக்களிடம் கொடுத்திருப்பதினாலும், அது காலங்களுக்குக்காலம் மாறுபட்டே கிடைத்திருக்கின்ற படியாலும் இவ்வேதங்களுள் பாரீசு சாதியாரின் சரிதங்களும் புத்ததரும நீதிகளும் கலந்திருப்பது நீங்கலாக சாமவேதத்துள் துவஷ்ட பிரமாவே சங்கராச்சாரியாக வந்திருப்பதாக சித்தூர் ஜில்லாத் தீர்ப்பில் வெளிவந்திருப்பதினாலும், இருக்குவேதத்துள் மாதவாச்சாரியின் குருவும் அவ்வேதத்துள்ள சில கீதைகளை வரைந்துள்ளதினாலும் சங்கராச்சாரி மாதவாச்சாரி இவர்களின் காலங்கள் சொற்பமாக விளங்குகின்றபடியாலும், ஆளில்லா உபதேசம் அதர்வணனுக்குப்