பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

அயோத்திதாசர் சிந்தனைகளின் இரண்டு தொகுப்புகளும் வெளிவந்து ஆண்டுகள் நான்கே ஆயின என்றாலும், அவை தமிழகத்தில் ஓர் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது உண்மையே. இந்த சல சலப்பு முழுமையும் கருத்துக்களின் புதுமையாலும், புரட்சித் தன்மையாலும் மட்டுமே ஏற்படவில்லை. கருத்துக்களின் வேறுபாட்டாலும், மொழியின் தொன்மையால் ஏற்படும் தெளிவின்மையாலும், ஆசிரியரின் தனிப்பட்ட எழுது முறையாலும் உண்டானது என்பதும் உண்மையே. இந்நிலையில் தொகுப்பாசிரியர் புரிந்து கொண்ட வரையில், அயோத்திதாசரின் சிந்தனைகளின் தனித்துவத்தை சுட்டிக் காட்ட வேண்டியது ஓர் சமூக பொறுப்பாக அமைகிறது.

அயோத்திதாசர் சிந்தனைகள் உருவாகிய ஆண்டுகள், குறிப்பாக பத்திரிக்கை மூலம் அவரது கருத்துக்கள் தமிழக முழுமையும், தமிழகத்திற்கு அப்பாற்பட்டும் பரவிய காலம், 1907 முதல் 1914 வரை இந்திய நவீன வரலாற்றில் நெருக்கடியான காலம். ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டு காலமாக அரசு வீற்றிருந்த காலனியாதிக்கத்தின் தாக்கங்கள், சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் முழுமையாக வெளிப்படத் தொடங்கிய காலம். நேர்முகமற்ற காலனியாதிக்கம், மிகக்குறைவான சமூக மாறுதல்களையே ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்ற நிலை மாறி, மிக அடிப்படையான பண்பாட்டு நிலைப்பாடுகளிலும் ஆழமான மாறுதல்களை, எளிதில் கண்டு அறிந்து, புரிந்து கொள்ள முடியாத முறையில் ஏற்படுத்திவிட்டது என்பதை பெருவாரியான மக்களும், மிக அதிகமாகவே பேரிழப்பைச் சந்திக்க வேண்டியிருந்த தாழ்த்தப்பட்ட மக்களும் புரிந்து கொள்ள ஆரம்பித்த காலம். அத்தகைய தெளிவு, சமூகத்தில் மேல் மட்டத்திலிருந்தோரிடத்தும் கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டோரிடத்தும் இரண்டு மாபெரும் வேறு வேறு விதமான எதிர்ச் செயல்பாடுகளாக விரிவடையத் தொடங்கியது. காலனியாதிக்கத்தின் செயல்பாடுகளால் பெரிதும் பயன்பெற்ற மேல்மட்டத்தார், அதன் பேரில் இதுகாறும் கொண்டிருந்த விருப்பை மாற்றி வெறுப்பாக (தேசீயம்) வெளிப்படுத்த முனைந்தார். அதற்கு மாறாக அதே ஆதிக்கத்தின் செயல்பாடுகளால் இழப்படைந்து கீழ்மட்டத்திற்குத் தள்ளப்பட்ட தாழ்ந்த சமூகத்தினர், நவீன முரண்பாடுகளின் உதவி கொண்டு எழுச்சி பெற முனைந்தனர். சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் ஏற்பட்ட இந்த இருபெரும் விரிசல்கள், பழமைச் சமூகத்தின் மரபு வழிவந்த விரிசல்களின் தொடர்ச்சியாகவே பிரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வழிவழி வந்த, சமூக விரிசலே, குறிப்பாக பிராமணியத்தால் பயன்பெற்று, அதனையே முதன்மையாக, முக்கியமாகக் கொண்டோர் ஒரு பகுதியாகவும் பிராமணியத்தால் தாழ்த்தப்பட்டு அதனோடு போராடி வந்தோர் மறு பகுதியாகவும் பிரிந்த சமூக விரிசலே காலனிய நவீனத்துள் நிலைபெறத் துவங்கியது. ஏற்கனவே மேலாண்மை பெற்றிருந்த சமுதாயங்களே இன்னமும் பலமுற்றன. ஏற்கனவே பிற்படுத்தப்பட்டிருந்தவையே இன்னமும்