பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


யிலைக்கூடும் விட்டில் போலும், சத்து சித்து ஆனந்தமென்னும் உள்ளொளி திரண்டு உண்மெய்யென்றும், புறமெய்யென்றும், அந்தர் அங்கமென்றும், பகிர் அங்கமென்றும் பிரிந்துலாவும்படியேறி மக்கள் கதியொழிந்து தேவகதிப்பெற்று நான்குவகைத் துக்கங்களொழிந்து நித்தியானந்தமுற்ற புத்தபிரான் தானடைந்த சுகானந்த காட்சியை தான் மட்டிலு மடைந்து போகாது உலகமனுக்கள் யாவருக்கு மூட்டி நான்குவகைத் துக்கங்களைப் போக்கிக் கொள்ள செய்விக்க வேண்டுமென்னுங் கருணை மிகுதியால் இல்லறந் துறவறமென்னும் இருவகுப்பாக்கி இல்லறத்தோர் சுகசீவ வாழ்க்கையில் பற்றறுக்கப் பஞ்ச சீலத்தையும் துறவறமுற்று சங்கஞ்சேர்ந்து சகலபற்றுக்களையு மொழித்து பிறவியை அறுக்க அஷ்டசீலத்தையுமருளி உலகமெங்கும் சங்கங்களை நாட்டி தனது தந்தைக்கும் மைந்தனுக்கும் தன் மனைவிக்கும் அவ்வரியதன்மத்தை ஓதி துக்க நிவர்த்தியடையச் செய்து வைத்ததுமன்றி அங்கங்கு நாட்டியுள்ள சங்கங்களுக்கு அடுத்தடுத்துச்சென்று மேலுமேலுந் தன்மத்தை ஊட்டிக் கடைத்தேறச்செய்து உலக சீவர்களின் மேன் நோக்கத்தையும் மக்களின் தெய்வகதிப்பேற்றையும் சருவவஸ்துக்களும் பூமியில் தோன்றி தோன்றி மறையுங்கூற்றையும் விளக்கிவிட்டு ஐன்பத்தைந்து வருடம் உலக சீர்திருத்தத்திற்கே உழைத்து ஜகத்குரு சங்க அற ஆச்சாரி என்னும் பெயர்பெற்று தனதெண்பத்தி ஐந்தாவது வயதில் பரிநிருவாண முற்றார் அவர் நிருவாணமுற்றது முதல் பரிநிருவாணமடையும் வரையில் அவரது தேகம் மூப்படையாது குமரபருவமுற்றே இருந்தபடியால் அவரை குமாரதேவ னென்றும் நித்திறையை நீக்கியிருந்தபடியால் இரவு பகலற் றோனென்றும், மரணத்தை ஜெயித்துக்கொண்டபடியால் காலகாலனென்றும், காம இச்சையை அவித்துவிட்டபடியால் காமதகனனென்றும், நிருவாணத் தால் அந்தரங்க முற்றபடியால் சத்தனென்றும் சிம்மம் புலி முதல் விஷப்பாம்புகள் யாவும் அவருக் கேவல் புரிந்துக் கூடிக்குலாவியதால் சித்தனென்றும், எக்காலும் ஆனந்தமும் தேஜசுடனிருந்தபடியால் ஆனந்தனென்றுங் கொண்டாடினார்கள்.
பரிநிருவாணமென்பது புளியம் ஓட்டைவிட்டு பழத்தைப் பிறிப்பது போலும் இலைக்கூட்டினின்று விட்டில் வெளியேறுவது போலும் புறமெய் யினின்று உண்மெய்யும், பகிரங்கத்தினின்று அந்தரங்கமும் மாற்றிப்பிரிப் பதேயாம். இதையே புத்தபிரான் சகலதேசத்தோருமறிய உச்சியின் வழியாக வொளிமயமாகத்தோன்றி மறைந்தாரென சீவிய சரித்திரங் கூறுவதுமன்றி சங்கத்து அறஹத்துநிலை பெற்றோர்களும் அவ்வகை ஒளிமயமாற்றிப் பிறந்ததாகவே அநுபவமும் காட்சியுமென்னப்படும். இவர்களையே இரு பிறப்பாளரென்று ஞான சரித்திரங்கள் முறையிடும். அதாவது தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும் தானே தானே ஒளிமயமாக மாற்றிப் பிறந்த பிறப்பொன்றுமேயாம். உண்மெய்யின் விளக்கத்தையே அவ்வையார் "வெள்ளி பொன் மேனியதொக்கும் உள்ளுடம்பினாய வொளி என்றுங் கூறியுள்ளாள். நிருவாணமென்பது உண்மெயொளி திரண்டு உடலோடு லாவலும் பரிநிருவாண மென்பது உண்மெயொளி யுரு வுடலைவிட்டகன்று ஆனந்தமாக வகண்டத் துலாவுவதேயாம். அவ்வொளிநிலையும் உண்மெப் பொருளும் அந்தரங்கசாதகர்க்கு விளங்குமேயன்றி பகிரங்கசாதகர்க்கு விளங்கவே விளங்காவாம்.

- 7:8; சூலை 16, 1913 -
 

111. அஞ்ஞான வந்தகாரச் சுட்டுக்கடிதங்கள்

நமது கோலாரிலுள்ள அன்பர்களிடமிருந்து "விசிட்டாத்வைத தோரணி பௌத்தம் பொது" வென்று 4-ம் நெம்பர் டிராக்ட் ஒன்றும், "புத்தசமயம் இந்துக்களுக்கு ஒத்த சமயமா" வென்று 5-ம் நெம்பர் டிராக்ட் ஒன்றும் ஆக இரண்டு சுட்டுக்கடிதங்கள் நம்பால்வரப்பெற்றோம். அவ்விரண்டினுள் ஒன்றில் என்.சி.கே. என கைச்சாத்திட்டும் மற்றொன்றில் அதுவுமின்றி பயந்து வெளியிட்டிருக்கின்றார்கள். புத்ததன்மத்தைக் கண்டித்து அன்னோர் அபுத்தமதத்தை நிலைநாட்ட வெளிதோன்றிய வல்லுனர் சென்னையில்