பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

X

பலமற்றவையாயின. பழமையில் தொடங்கிய இந்த விரிசல் நவீனத்துள் மேலோங்கி, புதிய அமைப்பு, பண்பாடு இவற்றுள் நிலைநிறுத்தப்பட்டது. இம்மாபெரும் சமூக விரிசல்களைச் சார்ந்தே நாடெங்கும் இரு பெரும் கோட்பாடுகளின் கோர்வைகளும் உருவாயின. இலை மறை காயாக முற்றிய பிராமணிய கொள்கை அடிப்படையிலான சாதீயம் ஒன்று: சிராமணிய கொள்கை அடிப்படையிலான சமத்துவம் மற்றொன்று. பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் கோட்பாடு ஒன்று. பிறப்பு அடிப்படையில் சமத்துவம் கற்பிக்கும் கோட்பாடு மற்றொன்று. இவையிரண்டுமே, இரண்டு வேறுபட்ட மாறுபட்ட, முரண்பாட்டில் மோதிக் கொண்டிருக்கும் கருத்துக் குவியல்களாக, சமூக இலட்சியங்களாக மேலாண்மைக்காகப் போட்டியிடும் கோட்பாடுகளாக விரிந்தன. இவற்றில் முந்தியதான சாதீயக் கொள்கையே வெவ்வேறு சமூக திரைகளின் மறைவில் தோன்றி இன்றைய இந்திய நவீனமாக ஓங்கி, பண்பாட்டில் பெருங் கலக்கத்தையும், சமூகத்தில் பல சிக்கல்களையும் ஏற்படுத்தி வைத்துள்ளது. இந்தக் கோட்பாட்டின் திரிபு மிகுந்த நவீன வரலாற்றையே நாம், இந்திய பண்பாட்டு மறுமலர்ச்சியென்றும், இந்திய சுதந்திர வரலாறு என்றும் அறிவோம். இந்திய சாதீயத்தின் அரசியல் வெற்றியும் அதன் மேல் கட்டப்பெற்ற அரசியல் அமைப்பும், பிந்திய சமத்துவ கோட்பாட்டை நவீன நிர்பந்தத்தால் நிறுவனங்களின் அளவில் மட்டுமே ஏற்றுக் கொண்டு, அடிப்படையான சமூக அளவில் அழித்துவிடவும், இன்றேல், செயலிழக்கும் வகையில் சீரழிய செய்யவுமே முனைந்தும், முயற்சியில் வெற்றி பெற்றும் வருகின்றன. இந்த இயங்கலின் முதிர்ச்சியையே இன்று நாம் சமூகத்தில் காண்கிறோம். சாதீய பொருளாதாரத்தின் உருவாக்கம், சமய அரசியலின் ஆர்ப்பாட்டம் இவைகளின் தாக்குதல்களால், உலகமயத்தின் சவால்களைச் சந்திக்கும் திராணியின்மை, இத்யாதி.

தொன்மையில் பிராமணியத்திற்கு மாற்றாக, முரண்பாடாக வளர்ந்து போராடி வந்த சிராமணிய - சமண மரபுகள் வேரூன்றி, வரலாற்று மாற்றங்களாலும் மேற்கத்திய நவீன கோட்பாடுகளாலும் பாதிப்புகளாலும் நவீன - சமத்துவ கொள்கையுருக்கொண்டு காலனிய நூற்றாண்டுகளில் இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு இடங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் எதிர்க் கோட்பாடாக முளைத்தன. அயோத்திதாசருக்கு முன்னும், பின்னும், சாதியற்ற சமத்துவ சமுதாய தத்துவங்கள், மனிதாபிமான சமூக அமைப்புக்கான கோட்பாடுகள், சமூக நீதி, பரவலான சமூக அதிகாரம் இவற்றை உள்ளடக்கிய வரலாற்றுக் கட்டுமானங்கள், நாடெங்கும் புலையர், ஈழவர், பறையர், பள்ளர், சாணார் வன்னியர், மாலர், மாதிகர், மகார், மகாலி, சூஹ்ரா , சமார், நாமசூத்திரர் இன்னும் பல ஆதிவாசி சமூகங்களின் இயக்கங்கள் மூலம் மங்குராம், காசிராம், சாமி அச்சூதானந்தர், ஜோதிபாபூலே, சகோதரன் ஐயப்பன், ஐயங்காளி, நாராயண குரு, சாமிதர்மதீர்த்தன், பெரியார், ஷிண்டே இறுதியாக அம்பேத்கார் ஆகியோர் முன் வைத்தனர். இவர்களுடைய எழுத்துக்களும், பேச்சுக்களும் பெரும்பான்மை யானவை, பதிவாகாதவை பதிவானவையும் பல்வேறு மொழிகளில் அமைந்தவை. இன்று ஆய்வு மொழி என்று ஏற்றுக் கொள்ளப்படும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படாதவை. மேலும் எதிர்க் கோட்பாடுகளை உள்ளடக்கியவை என்பதாலும், போராடும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்குரல் என்பதாலும்,