பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


இத்தகைய மதங்களைச் சார்ந்து முற்கூறிய சுவாமிகளே சமயாச்சாரிகளாக வந்து பஞ்சசீலமுற்றுள்ள பௌத்தர்களை வசியிலுங் கழுவிலுங் கொன்று தங்கள் மதத்தை நிலைநிறுத்தியவர்கள் இக்காலத்தில் அவதாரமெடுத்து வருவார்களாயின் பௌத்தர்களேதோ சிவகாருண்யமுற்றிருப்பினும் மகமதி யர்களும் கிறிஸ்தவர்களும் ஒன்றுகூடி பால்கனுக்கும் துருக்கிக்கும் மத்தியில் கொண்டுபோய் விட்டு வசியைத் திருப்பிவிடுவார்களென்று கூறுவீராக.

- 7-19; அக்டோபர் 15, 1913 –
 

121. கும்பகோணம் யதார்த்தவசனி பத்திராதிபரைக் கடாவல்

ஐயா 'யதார்த்தவசனி' பத்திராதிபரே! தாங்கள் செப்டம்பர் மாதம் 20ம் நாள் வெளியிட்டுள்ளப் பத்திரிகை இரண்டாம் பக்கம் பதின்மூன்றாவது வரியில் ஆரிய மதமே சிறந்ததென்று கூறியுள்ளீர் அவ்வாரியனென்பவன் யார் எத்தேசத்தான் எங்கு பிறந்தவன் எப்பாஷையினன் அவன் காலவரை என்னை, ஆரியமென்னு மொழி வடமொழியா தென்மொழியா அம்மொழியின் பொருளென்னை இவற்றை சரித்திரதாரத்துடனும் நூலாதாரத்துடனும் விளக்குவீராக.
பௌத்த மதத்திற்கு மூலபுருஷன் சித்தார்த்தி என்னும் மனுமகனுண்டு, கிறிஸ்து மதத்திற் இயேசென்னு மனுமகனுண்டு, இஸ்லாம் மதத்திற்கு மகமதென்னு மனுமகனுண்டு அவர்கள் பிறந்து வளர்ந்ததேசமுமுண்டு. அவரவர்கள் பாஷைகளு முண்டு. காலவரைகளும் உண்டு அவைபோல் சிறக்கக்கூறியுள்ள ஆரியனென்பன் யாவனென்பதேயாம்.

-7:19; அக்டோபர் 15, 1913-
 

122. மோட்சமும் நரகமும்

கடந்த வாரத்தில் யான் வீட்டிலிருக்கும் பொழுது ஒரு மகம்மதியரொருவர் என்னிடம் வந்து உட்கார்ந்து சில ஆத்ம விசாரணையைப்பற்றி வார்த்தையாடிக்கொண்டிருக்கும் பொழுது அவர் சொன்னதாவது நாம் செய்யும்படியான புண்ணிய, பாப கர்மங்களெல்லாம் கடவுளானவர் கடைசியில் எழுப்பி அவரவர்கள் செய்த புண்ணிய பாபத்தை தீர விசாரித்து புண்ணியஞ் செய்தவர்களுக்கு மோஷத்தையும், பாபம் செய்தவர்களுக்கு நரகத்தையும் ஈவார் என்று சொன்னார் அதை இவ்வடிமை கேட்டு சொன்னதாவது ஐயா கடவுளானவர் இறந்துபோன ஜீவர்களையெல்லாம் கடைசி காலத்தில் சரீரத்தோடு எழுப்பி விசாரிக்கின்றாரா என்று வினாவியதற்கு அவர் சொன்னதாவது எங்களுடைய குரானிலும், கிறிஸ்தவர்களுடைய பைபிலிலும் அப்படியே எழுதியிருக்கின்றது. நீங்கள் தான் மறுஜென்மம் உண்டென்றும், மிகவும் பாபம் செய்தவர்கள், கழுதையாகவும், பன்றியாகவும், இன்னும் இழிவான பிறவிகளாகவும் பிறக்கின்றார்களென்றும், விசாரித்துப் பாராமல் பேசிவிடுகின்றீர்கள், அது சுத்தப் பொய், யான் அதை ஒருகாலம் நம்பமாட்டேன் மேலும் எவறுக்காவது ஒரு பெருத்த ஆபத்து வந்தால் சட்டென்று அவன் பூர்வீகத்தில் செய்த கர்மமானது இந்த ஜென்மத்தில் வந்து வாய்த்தது என்று சொல்லிவிடுகிறீர்கள், யான் ஒருகாலும் நம்ப மாட்டேன் என்று மறுபடியும் சொன்னார், யான் மறுபடியும் கேட்டதாவது; நல்லது ஐயா ஒரு வாலிபன் யௌவனஸ்திரீயைக் கலியாணம் செய்துக் கொண்டு சிலநாள் சென்ற பிற்பாடு அவர்கட்கு ஜனிக்கும்படியான பிள்ளைகள் குஷ்டரோகியாகவும், முடவனாகவும், குருடனாகவும் ஏன் பிறக்கின்றது. அது யாது காரணத்தினால் இம்மாதிரியாக ஜென்மம் எடுக்கவேண்டியதென்று கடாவினால் அவர் சொல்லுகிறார். அம்மாதிரி யாகப் பிறப்பது தாய்தந்தையருடைய சேர்க்கையினாலும், அல்லது அவர் களுடைய தாய் தகப்பனாருக்கு யாருக்காவது இவ்விதமாக இருந்தால் குமாரன் குமாரத்திகளுக்கும் பிறக்கும்படியான பிள்ளைகளுக்கும் வாய்க்கிற தென்று சமாதானம் சொன்னார். அதை யான் யோசிக்கும்போது முற்றிலும் நம்பக்கூடியதாயில்லை. ஏனென்றால் “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றும் திரிக்குறள் வாக்கின்படி யதார்த்தம் அறியவேண்டுமென்று