பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

127. இந்துக்களென்போர் சாதி மத சங்கை

வீ. முனிசாமியென்னுமன்பரே தாம் எழுதியுள்ள கடிதம் மிக்க விரிவாயும் வீணாய் சங்கையாயும் யாதொரு பலனுமற்றதாயுமுள்ளது கண்டு வெளியிடாது நிறுத்தி விட்டோம். இந்து மதத்திற்கு மூலபுருஷன் யாரென்றால் ஆரிய மதமென்பார்கள், ஆரிய மதத்திற்கு மூல புருஷன் யாரென்றால் அது அனாதியாயுள்ள தென்பார்கள். ஆதியாக வொன்று தோன்றிய பின்னர் அனாதியென்னு மொழி தோன்றுமா, அனாதியினின்றே ஆதி தோன்றுமா வென்னில் பொய்யிற்குப் பொய் முட்டுக்கொடுப்பார்கள் பூமி அண்டவடி வாயுள்ளதால் பௌத்த சாஸ்திரங்களில் பூவண்டமென வரைந்திருக்கிறார்கள். தங்களிந்து சாஸ்திரத்திலோ ஒரு அசுரன் பூமியைப் பாயாக சுருட்டிக் கொண்டு போய்விட்டானென்று வரைந்திருக்கின்றீர்களே அது பொருந்தும் பொய்யா, பொருந்தாப் பொய்யாவெனவுசாவில் திகைத்து நிற்பார்கள். அந்த வேஷத்தை மெய்யென நம்பியிருப்போரே கள்ளுக்கடையில் சாதியைக் காணோம், சாராயக் கடையில் சாதியைக்காணோம், கசாப்புக் கடையில் சாதியைக்காணோம், கவுச்சிக்கடையில் சாதியைக்காணோம், தாசி விடுகளில் சாதியைக்காணோம், பெரும்பாலும் இருளடைந்துவிட்டால் சாதியைக் காணோம். விடிந்து சூரியன் வெளிவந்த பின் சாதிவேஷப்பிலுக்கு மேலு மேலும் பரவுவதும் தம்மெ யொத்த மக்களைத் தாழ்த்தி பேசவு மொக்கு மோவென்னில் மறுமொழி கூற வகையற்று திகைப்பார்கள். அத்தகையோர் பால் சங்கை புரிவது உமிகுத்தி கை சலிப்பது போலாம்.

-7:38; பிப்ரவரி 25, 1914 -
 

128. விலாவெடித்துப் பிறத்தல்

வினா : ஐயனே, யான் நேற்று மாலை குஜிலுக்குச் சென்று ஓர் ஜவுளிக்கடையில் உட்கார்ந்தேன், அதன்பின் ஓர் பிரோட்டிஸ்டென்ட் பாதிரியாரும் வந்து உட்கார்ந்தார். அவர் சற்று நேரம் என்னை உற்றுப் பார்த்து நீரென்ன கிறீஸ்த்தவரோ வென்று நகைத்தார், அதற்கு நான் கிறீஸ்த்தவனல்ல பெளத்தனென்றேன் அப்போது அவர் முகம் வேறுபட்டு நீரென்ன முழு அஞ்ஞான பாலியனாயிருக்கின்றாய் புத்தனென்பவனோ ஓர் மனிதன், அவன் பெண்சாதி பிள்ளைகளுடனிருந்ததுடன் வைப்பாட்டி களுடனுமிருந்திருக்கின்றான் அவன் தாயிடம் பிறக்கும் போதே விலா வெடித்துப் பிறந்து தாயைக் கொன்றவன். கடைசியாக பன்றியினிறைச்சியைத் தின்று பேதிக் கண்டு இறந்து போனான். இந்த சங்கதிகள் யாவையும் ஒரு காசு பத்திரிகையில் பிளந்து எழுதியிருக்கின்றதே அதை நீர் காணவில்லையோ, உங்கள் தமிழன் பத்திராதிபனும் அதைப் பார்க்கவில்லையோ வென்றார். ஐயா தாங்கள் பிளந்து எழுதியுள்ளதை தமிழன் பத்திராதிபர் கண்டிருப் பாராயின் பிளந்ததெல்லாஞ் சேர்த்து கொளித்தியிருப்பார், அவர் பார்க்கவில்லை போலும் என்றேன். இன்னும் அவருக்கு முகச்சுளிப்பு உண்டாகி ஓர் கேவலமான மனிதனை தெய்வமாகத் தொழுவோருக்கு அறிவுங்கிடையாது மோட்சமுங் கிடையாதென்று கூறியதுடன் புத்தரை தூஷித்தே பேசினார். அப்போது என்மனஞ்சகியாது தாங்களோர் பாதிரியாராயிருந்துங் கோபகுறியோடு பேசுவதால் நான் யாதேனும் பேச வஞ்சுகிறேனென்றேன் இல்லை நீர் பயமில்லாது பேசலாமென்றார். ஐயா, ஓர் தருமத்தைப் பற்றியாவது மதத்தைப் பற்றியாவது பேசவேண்டுமானால் முதலாவது அவர்களது கருத்துகளை தெரிந்து கொண்டு பேசவேண்டியது. தெரியாது பேசுவது நியாயமல்லவென்றேன். அது என்ன கருத்தென்றார். எங்கள் புத்தாகமக்கருத் தோவென்றால் மனிதனானவன் தன் அறிவை வளர்க்கும் நூல்களையேனும் போதனைகளையேனும் கேட்டு மனமாசகன்று அதாவது இதய சுத்தமுண்டாகி விடுவானாயின் அவனையே தேவனென்று கொண்டாடுவது வழக்கம் அக்கருத்தறியாமலே தாங்கள் பேசிவிட்டது நியாயமல்லவே என்றேன். ஆனால் உலகத்தை உண்டு செய்த வொரு தேவனுண்டோ யில்லையோ வென்றார்.