பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

xiv

‘இந்து மதம் ஆங்கிலேயரின் கண்டுபிடிப்பு’ பண்பாட்டு - அரசியலின் நிர்மானத்தை மூடி மறைக்க பிராமண சக்திகள் எடுத்துக் கொண்ட போர்வை; இது நிறைந்த பட்சம் அரசியலும் குறைந்த பட்சமே, ஏன் இல்லையென்று சொல்லக்கூடும் அளவுக்கே, சமயமும் ஆகும். இது ஒரு கற்பிதம். இதனை ஒரு சமயம் என்று கொள்வதே தவறு என்ற முடிவுக்கு வந்துள்ளார். குறிப்பாக ரோமிலா தாபர் என்ற வரலாற்றறிஞர் இது பற்றி தெள்ளத் தெளிவாகவே விளக்கியுள்ளார். இதுபோல மற்ற சமூக பிரச்சனைகளிலும் அயோத்திதாசரின் உள் உணர்வு, இன்றைய அறிவியலாரின் துணிபுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இதற்குக் காரணம் அயோத்திதாசரின் அணுகுமுறை, ஆய்வு முறையேயாகும். கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும் மெய் என்று கொள்ளாமல் சமூக நிகழ்வுக்குப் பின் சென்று அவற்றை விமரிசனத்திற்குட்படுத்தி அவற்றின் சமூக அர்த்தத்தையும், முக்கியத்துவத்தையும் வெளிக்கொணர முனையும் முயற்சியே பாசிட்டிவிச அணுகுமுறையால் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க முயன்று திண்டாடி நிற்கும் இன்றைய பெருவாரியான சமூக அறிவியலுக்கு அயோத்திதாசர் அளிக்கும் மாற்று அணுகுமுறை. இது ஆசிரியரின் மூன்றாவது சிறப்பு அம்சம்.

அயோத்திதாசர் சிந்தனைகளின் ஈர்ப்பிற்கு மற்றொரு அடிப்படைக் காரணம், அவரது எண்ணக்குவியல் நேர்மையானது. ஒருங்கிணைக்கப் பெற்றது. 'நேர்மை' என்பதன் பொருள் வேரடியிலிருந்து தானே தன்னாக எழும்பும் தன்னெழுச்சிநிலை. எண்ணக் குவியல்களின் எழுச்சிக்குப் பல்வேறு சக்திகள், துணை போகலாம், தூண்டிவிடலாம். ஆனால் எங்கே தன்னெழுச்சியின் அகக்கரு இல்லையோ அங்கே புறச் சக்திகள் ஓரளவுக்கே செயல்படும். ஆனால் எங்கே தன்னெழுச்சியின் அகக்கரு துடிதுடிப்புடன் உயிரோட்டமுள்ளதாக உள்ளதோ அங்கே புறச்சக்திகள் நிறையவே துணைபுரியும். அயோத்திதாசரின் சிந்தனை - உள் உணர்வுக்குவியல்களும் அவ்வாறே. தமிழ் மொழி, சித்த மருத்துவம் இவற்றில் வேரூன்றி நிற்பவர் அயோத்திதாசர். சுயமாக சிந்திக்கும் திறமையையும் தாழ்வு மனப்பான்மையின்றி தன்னம்பிக்கையுடன் வாழும், வாழ்ந்து வந்த பெருமரபுகளைக் கொண்ட சமூகத்தினின்று எழுந்து நிற்பவர். காலனியாதிக்கத்தின் செயல்பாடுகளால் முரண்பாடான தாக்கத்திற்குள்ளானவர். நீண்ட வரலாற்றுக் கண்ணோட்டத்தில், சிறு கால அளவில் பெரும் மாறுதல்களை, பெருவாரியான சாதி சனங்கள் சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்படும் மாறுதல்கள் அவரைத் தட்டி எழுப்பிய அதேநேரத்தில் அதே காலனியாதிக்கத்தின் தவிர்க்க முடியாத விளைவான சமத்துவ அடிப்படையிலான நவீனத்தையும் கண்டுணர்ந்தவர். இத்தாக்குதல்கள் அவரை வரலாற்று பண்பாட்டு ஆராய்ச்சியில் இழுத்துச் சென்றன. இறந்த காலத்தின் இருட்டறையிலிருந்தே நிகழ்-எதிர்காலத்திற்கு வேண்டிய கருவிகளையும், சாதனங்களையும், நுண் உணர்வுகளையும் தேடி எடுத்து வந்து சமூகத்தின் முன் வைக்கிறார். வரலாற்றையும் பண்பாட்டையும் புறக்கணிக்கவோ, மறுக்கவோ கூடாதபட்சத்தில், அவற்றை கூர்ந்து நோக்கியே பிரச்சனைகளைத் தீர்க்க முயல்கிறர். இந்தப் பின்னணியில் எழுந்ததே அவர் அடிக்கடி கூறும் சமூக விடுதலைக்கான செயல்பாட்டு முறை: எந்த வழியில் நாம் தாழ்த்தப்பட்டோமோ அதே வழியில் சென்றே விடுதலை பெற முடியும். இந்த சமூக விடுதலைக்கான செயல்பாட்டு முறை நிகழ்வுகளுக்கு பின்