பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

Xv

மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொணர முயலும் பண்பாட்டு விமரிசன ஆய்வுக் கோட்பாட்டு முறைக்கும் பொருந்தும்.

மேலும் யாரும் யாரையும் மேலே எற்றவும், கீழே இறக்கவும் முடியாது. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” தீவிரத்தன்மை தன் எழுச்சி துணையுடன் வரலாம். ஆனால் அதற்கு முன் தன்னுணர்வு துளிர்த்திருக்க வேண்டும். இதுவே தன்மானம், தன் மரியாதை. இவற்றிற்கு அடிப்படை நவீனம் என்பதன் முறையான அடிக்கல். ஆசிரியரின் எண்ண உணர்வுக்குவியல் இந்த மாதிரியான தன்னுணர்வில் தோய்ந்தவை.

அயோத்திதாசரின் சிந்தனைகள் ஒருங்கிணைக்கப் பெற்ற கண்ணோட்டத்தில் அமைந்தவை. அதாவது சமூக உலகின் ஒரு பிரச்சனையை மட்டுமோ அல்லது சமூகத்தின் ஒரு பகுதியான ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனையை மட்டுமோ மையமாகக் கொண்டதல்ல. ஒட்டுமொத்தமாக முழுச் சமூக உலகத்திற்கும் முரண்பாடற்ற, மாற்றுக் கருத்தை வைக்க முயல்பவை: அவரது சிந்தனையில் மொழியியல், சமூகவியல், மானிடவியல், பண்பாட்டியல், அறிவியல், ஆன்மீகம், ஒழுக்கம், அரசியல் என அனைத்திற்கும் இடமுண்டு. இவை எல்லாமே ஒருங்கிணைந்த நிலையில் புதுமைக்கு வழிகாட்டுகின்றன. பெருவாரியான கொள்கைவாதிகள் சமூக உலகைக் கூறுபடுத்தி ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாகக் கற்பனை செய்து ஆராய்ந்து வந்த கால கட்டத்தில், அயோத்திதாசர் போன்ற ஒருவர் சமூக உலகை ஒட்டு மொத்தமாகப் புரிந்து கொண்டு வரையறுக்க, நிர்ணயிக்க முயல்வது அதிசயமான ஒன்று. இந்த அவரது முயற்சியே அவரது ஈர்ப்புக்குக் காரணமாயிருக்கிறதென்றால், இதே காரணம் அவரது சிந்தனைகளை எளிதில் புரிந்து கொள்வதற்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கிறது. ஒரு படி மேலாக அவரை ‘குழப்பவாதி’ என்று தள்ளிவிடவும் காரணமாய் அமையக்கூடும்.

அயோத்திதாசர் தன்னுடைய விளக்கமளிக்கும் முயற்சியில் முழுமையாக வெற்றி பெறுகிறார் என்பது இங்கு வாதமல்ல. ஆனால் அவரது முயற்சியே இங்கு அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது. வரலாறு, பண்பாடு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை, பிரச்சனைகளாக ஏற்றுக்கொள்ள அவர் மறுக்கிறார். சில சொற்களுக்கு வலிந்து பொருள் காண முயல்கிறார். அவரது சில வரலாற்றுக் குறிப்புகள் தவறாக இன்று உணரப்படுகின்றன. விளக்கங்கள் சில வினோதமாகத் தோன்றுகின்றன. ஆனால் எந்த இலட்சியவாதியின் எண்ண உணர்வுக்குவியலில் இந்தக் குறைபாடுகள் இல்லை? ஆனால் உயர்த்திக் காட்டப்பட வேண்டியது அவரது தனிப்பெரும் முயற்சி. சமூகத்திலும் சமூகச் சொல்லாடலிலும், முடிவடைந்தவை, தெளிவடைந்தவை, தீர்க்கப்பட்டவை என்று பெருவாரியான அறிவு ஜீவிகளால் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட உண்மைகளையும் கோட்பாடுகளையும், தத்துவங்களையும் மறு பரிசீலனைக் குட்படுத்தும் அரவது முயற்சியும் அணுகுமுறையுமே அயோத்திதாசரின் புதுமை. அவர் கூறும் இந்த மூன்றாம் மாற்று இன்று தாழ்த்தப்பட்டவர்களாக எண்ணப்படும் பெருவாரிசனங்களின் கண்ணோட்டமும், எதிர்பார்ப்புகளும், எழுச்சிகளுமாக வெளிப்பட்டு புதியதோர் சமூக விடுதலைக்கான வழியைத் திறந்துவிடக்கூடிய ஆற்றலைப் பெற்றது என்பது மட்டும் உண்மை.