பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து . . .

இராயப்பேட்டை மருத்துவர் - பேர்பெற்ற அயோத்திதாஸ் பண்டிதர் வரவழைக்கப்பட்டனர். அவர் என்னைச் சோதனை செய்தனர். மருந்தெண்ணெய் கொடுத்தது பண்டிதர்க்குச் சொல்லப்பட்டது. பண்டிதர் எண்ணெய் முறைகளை ஆராய விரும்பினர். முறைகள் படித்துக் காட்டப்பட்டன. 'பத்தியத்தில் ஏதாவது தவறு நடந்திருக்குமா' என்று பண்டிதர் கேட்டார். என் அன்னையார், 'மிக எச்சரிக்கையாகப் பையனுக்கென்று தனியே சமைக்கிறேன்' என்றார். பண்டிதர் என்னைப் பார்த்து, 'நீ ஏதாவது கடையில் வாங்கித் தின்றாயா?' என்று வினவினர். உண்மை உரைத்தேன். மருத்துவர், 'அபத்தியம், அபத்தியம்' என்று வாயோடு சொல்லச் சொல்லி, 'எண்ணெய்முறை எழுதிக் கொடுத்தவர் யார்? அவரை அழைத்து வரல் முடியுமா?' என்று என் தந்தையாரை நோக்கினர். 'அவர் ஒரு சாமியார். எப்படியாவது அவரைக் கொண்டு வருகிறேன்' என்றார் தந்தையார். பண்டிதர் தேறுதல் கூறி விடைபெற்றனர். பொழுது விடிந்ததோ இல்லையோ என் அருமைத் தகப்பனார் ஓடினார் துள்ளத்துக்கு; சூழ்ந்த கிராமங்களெல்லாம் உழன்றார். சாமியாரைக் கண்டாரில்லை; வருத்தத்துடன் திரும்பினார்; பண்டிதரிடம் போய்ச் சாமியாரைக் கண்டுபிடிக்க இயலாமையைத் தெரிவித்தார். 'முரட்டு எண்ணெயைச் சின்ன பையனுக்குக் கொடுக்கலாமா' என்று பலர் பேசினர். தவறு செய்தவன் யான். பழி பெற்றோருடையதாயிற்று! என்னே உலகம்! அயோத்திதாஸ் பண்டிதர் சிகிச்சையில் இறங்கினார். முதலில் தொடங்கப்பட்டது தைல முறை. தைலம் நாடோறும் வேளைக்கு வேளை முட்டிகளில் பூசப்பட்டது. ஒரு வாரங் கடந்து முட்டிகளில் புண்கள் தோன்றின. அத் தோற்றங் கண்ட பண்டிதர்க்குத் தைரியம் பிறந்தது. அவர், 'முடக்கை நீக்கிவிடலாம்; ஆனால் காலம் நீடிக்கும்' என்றார். பெற்றோர் முகம் மலர்ந்தது. பண்டிதர் என் பொருட்டுப் பெருமுயற்சி எடுத்தார். அவர் ஒருவித மருந்தா கொடுத்தார் ? விதம் விதமான மருந்து கொடுத்தார். யான் மருந்தனானேன். பண்டிதர் மெழுகு கொடுப்பார்; இரசாயனங் கொடுப்பார்; செந்தூரங் கொடுப்பார் பஸ்மம் கொடுப்பார்; கிருதம் கொடுப்பார்; சூரணம் கொடுப்பார். யான் மருந்து தின்று தின்று அலுத்து விட்டேன்.

எனக்குப் பணி செய்யும் பொருட்டு என் தமக்கையார் அம்மணியம்மாளும், அவர்தங் கணவனாரும் வீட்டிலேயே தங்கினர். குழந்தையில் அன்னையார்க்கும் தமக்கையார்க்கும் சுமையானேன், இப்பொழுதும் அவர்க்குச் சுமையானேன். அப்பொழுது சுமையாதல் இயற்கை. இப்பொழுது சுமையாதல் இயற்கையா? உளுந்துவடை தின்றதின் அறியாமை! என்ன செய்வேன்? துன்பம் ஒருநாளா? இரு நாளா? பன்னெடுநாள் ! துன்பம் சகித்தல் என்னாலேயே இயலவில்லை. மற்றவர் எங்ஙனஞ் சகிப்பர்? ஈன்ற அன்னையார் - உடன்பிறந்த தமக்கையார் சகித்தனர். அன்பு எதையும் சகிக்கச் செய்யுமன்றோ? எனக்கு வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றியது. உடல் மெலிந்தது; தோல் வற்றியது; என்புக் கூடானேன். 'பொதுக்கு' வற்றலாகியது. ஏறக்குறைய ஒன்பது திங்கள் கழிந்தன. முடங்கிய கையுங் காலுஞ் சூம்பின. 'சூம்புதல் நற்குறியன்று' என்று வருவோர் போவோர் பேசுவர். அப்பேச்சு எனக்கு நாராசம் போலிருக்கும். அப்பேச்சைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு மரண நினைவுண்டாகும். நோயாளியின் முன்னே பலர் பலவாறு பேசுவது தவறு. அப்பேச்சால் விளையும் பயனை யான் சிறு வயதிலேயே அனுபவித்தேன். எனது மனோநிலையைக் குறிப்பால் உணரும் அன்னையார் வருந்துவார்; பல