பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /5


பொன்னினாற்செய்த சங்கிலிகளையும் அளித்துப் பூரிக்கச்செய்த ஜூபிலியை நோக்குங்கால், யூதர்கள் ஜூபிலி -ஆங்கிலேயர் ஜூபிலி நீங்கலாக ஈதோர் புதின ஜூபிலியாக விளங்குகின்றது.

இத்தகையக் குதூகலக் கொண்டாட்டத்திற்கு நந்தேய பாடைகளாகுந் திராவிடத்தேனுங் கன்னடத்தேனும் மராஷ்டகத்தேனும் ஆந்திரத்தேனும் ஓர் சிறப்பு மொழியில்லாமல் அகன்றது போலும்.

அந்தோ! அங்ஙன மகலாது சுதேசமொழிகள் சுகமுற்றிருக்குமாயின் யூதர்கள் மொழி சாதனமுராவாம். சிலவாண்டுகளுக்குமுன் விகடதூதன் பத்திராதிபர் கனம் இராஜேந்திரமவர்கள் 25 வருட காலம் நடத்திய பத்திரிகையின் கஷ்டத்தையுணர்ந்த அன்பர்களொவ்வொருவரும் அவர் கரத்திற்குக் கங்கணமளித்தோமென்று குதூகலித்தாரன்றி வெள்ளி ஜூபிலி யென்று தங்கத்தையும், தங்க ஜூபிலியென்று வெள்ளியையும் அளித் தாரில்லை. ஆதலின் நமது சுதேசமித்திரன் பத்திராதிபர் பட்ட கஷ்டங்கள் யாவையும் சுதேசபாஷையில் தெள்ளறளிக்கி அஃதைக் கொண்டாடுங் கோஷத்திற்கு சுதேச மொழியிலோர் சிறப்புப்பெயரளிக்காது பொருளற்ற பரதேசிப்பெயரை அளித்ததே போதுங் கவலையாம்.

-1:32; சனவரி 18, 1908 -

11. முஸ்லீம் நேசன்

இந்துதேசத்துள் தமிழ்ப் பத்திரிகைகள் எத்தனையோ தோன்றி மறைந்திருப்பது சகலருக்குந் தெரிந்த விஷயம். அவ்வகை மறைவுக்குக் காரணம் யாதென்றால் தமிழ் வாசிக்கும் அன்பர்கள் சுயபாஷா பத்திரிகையை வாங்கி வாசிக்கவும் சுதேச வர்த்தமானங்களை அறியவும் சுதேச விருதிசெய்யவும் விருப்ப மில்லாதவர்களாதலின் பத்திரிகைகளின் விருத்தி குறைந்து மறைந்துவிடுகின்றது.

சீனதேசத்தில் ஆயிரம் வருஷம் ஆயிரத்தி ஐந்நூறு வருஷம் ஒவ்வோர் பத்திரிகைகள் நிலைத்திருப்பதற்குக் காரணம் யாதென்றால், அவர்கள் தங்கள் சுயதேச ஒற்றுமெயையும், சுயதேச கல்வியையும், சுயதேசகைத்தொழிலையும், சுயதேச விருத்தியையும் நாடியவர்களாதலின் ஒவ்வோர் குடியானவனும் பத்திரிகைகளை வாங்கி வாசித்து செய்தொழிலையுஞ் சீர்திருத்தத்தையுஞ் செவ்வனே நடாத்தி வருகின்றார்கள்.

இத்தமிழ் வழங்குந் தென்னிந்தியாவிலோ சாதிநாற்றமென்னுங் கசிமலத்தால் தாங்கள் சாதியோர்மட்டிலும் வாசிக்கலாம், ஏனைய சாதியோர் வாசிக்கப்படாதென்னும் பொறாமெயும் பொச்செறிப்பும் வாய்த்தவர் களாதலால் பொது நலங்கருதி பத்திரிகைகளை வாசிக்க பிரியமில்லாமல் விட்டு விடுகின்றார்கள்.

இத்தகைய விடுக்கணிலும் நமது முசிலீம் நேசனவர்களிடைவிடா ஊக்கத்தாலெடுத்த முயற்சியை சாதிப்பான் வேண்டி பத்திரிகையின் ஆதரணைக்கர்த்தராலும் கையொப்பக்காரராலும் உதவி கொண்டு எழுதுகை சோர்வுறாது இரவுபகல் நித்திரையற்று எண்ணம் யாவும் பத்திரிகையிலுற்று இருபத்தைந்து வருடம் நடாத்தி வந்திருக்கின்றபடியால் இம் முசிலீம் நேசனின் ஆதரணைக்கர்த்தர்களுங் கையொப்ப நேயர்களும் மற்ற முசிலீம் கனவான்களும் ஒன்றுகூடி முசிலீம் நேசன் இருபத்தைந்தாவது வருடக் கொண்டாட்டமும் பத்திராதிபருக்கு வந்தன வாழ்த்தலும் பத்திரிகை விருத்தியுஞ் செய்து பாலிக்கும்படிக் கோருகிறோம்.

- 1:32; சனவரி 18, 1908

12. அஞ்ஞானியா கிறிஸ்தவனா

உ .கோ.தி.சி.நா., தங்களுடையக் கடிதத்தை வெளியிடாமல் நிறுத்தியிருக் கின்றோம். காரணம் - ஞானமென்பது இன்னதென்றும் அஞ்ஞானமென்பது இன்ன தென்றும் அறியாத அவிவேகிகள்தானத்தகைய வார்த்தையை வெறுமனே கூறித் திரிவரன்றி விவேகிகள் ஒருக்காலுங் கூறமாட்டார்கள்