பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


நமதன்பர் அசத்தியவிரதசாதியையும் மதத்தையும் வினாவியதென்னோ விளங்கவில்லை.

நமது சத்தியவிரதர் ஏதுக்குத் தக்க நிகழ்ச்சியின்றி சாதிக்கத்தக்க சன்மார்க்கமுண்டென்று பிராணாயாம நிலையை விளக்குவாராயின் அதற்கு சாதியும் வேண்டும் மதமும் வேண்டுவதே. காரணத்திற்குத் தக்கக் காரியங்கள் தோன்றுவதாயின் இவரது பூரணத்திற் றோன்றும் பொய் மதமும், பொய்ச்சாதியும் போன்ற வழுக்கேயாம். ஆதலின் நமதன்பர் பிராணாயாம ரகஸியங் கூறுவதற்கு முன் பிராணாயாமத்தினின்று சாதியு மதமுந் தோன்றிற்றா அன்றேல் சாதிமதங்களினின்று பிராணாயாமந் தோன்றிற்றா வென்பதைத் தீட்டிக்காட்டுவரேல் இவர் கூறப்போகும் பிராணாயாம பலன் பலருக்கும் பயன் தரும். ஆக்கிது கூறாது கூறுவராயின்,

ஓர் வஸ்து உண்டடி பாட்டி யென்னும் பேரனை எங்கடப்பாபேரா எங்கடப்பாபேரா வென்றிரு வருமோடி யொன்றுங்காணாது ஒருவர் முகத்தை யொருவர் பார்த்து பேரனும் பொய்யைச் சொன்னான் பாட்டியும் பேதையானாளென்பது போல் முடியும்.

- 2:2; சூன் 24, 1908

22. மருள், மருளர்

மருள் என்பதென்ன? மருளர் என்பவர் யாவர்? இம்மருளர் என்ப வர்கள் தலையை விரித்தாடுங்கால் எனக்கு கோழி வேண்டும், குரும்பாடு வேண்டும், இரண்டுஜாடி சாராயம் வேண்டுமென்று சொல்வதென்ன? இவர்கள் திரிகாலமும் சொல்லுகிறார்களென்பது எப்படி?

இவர்களை அநேகர் விழுந்து கும்பிடுகிறதும் இவர்களுடைய வார்த்தையை மிகவும் மேன்மெயாய் நம்புகிறது என்ன காரணம். சிற்சிலர் வேதாந்திகளென்றும், ஞான நூல்களெல்லாம் வாசித்தவர்களென்று அநேக சீஷர்களையும் சேர்த்துக்கொண்டு குருசாமியென்ற பேருடன் இருப்பவர் களுமாகிய மீசை நரைத்த கிழவர்களும் இம்மருளர் வார்த்தைகளுக்கு கீழ்படிவதும் ஆடுகளையும், கோழிகளையும் அருப்பதுமாகிய செயல்களை செய்கிறார்களே? இச்செய்கை எக்காலத்திலிருந்து உண்டானது. பூர்வத்தி லிருந்ததா? இவர்கள் ஆடுங்கால் நான் " மதுரைவீரன்" நான் "மாரியாத்தா" நான் "பூசைமுனி" என்னும் நாமதேயங்களென்ன?

எம்.வி.கே., சக்கன்றாபாத்

அம்மே, நீவிர் விடுத்த வினாக்கள் விபரீதமாயினும் அதன் விருத்தாந்தத்தைச் சிலது விளக்குவாம். அதாவது, புத்ததன்மம் இந்து தேச முழுவதும் பரவியிருந்த காலத்தில் சுவாசசாதன ரென்றும், சர - அப்பியாசி களென்றும், பஞ்சபட்சி போதனரென்றும் வழங்கப்பெற்ற சில விவேகி களிருந்தார்கள்.

அவர்களால் குடிகளுக்குள்ள நற்குறி, துற்குறி இவ்விரண்டையு மறிந்து செல்காலம், நிகழ்காலங்களை மட்டிலும் சொல்லிக்கொண்டுவந்தார்கள். அவற்றால் ஐந்தெழுத்தின் குறிப்பறிந்து சொல்லுவோரை பஞ்சபட்சி சாஸ்திரிகளென்றும், சுவாசமாகிய சரநிலையின் குறிப்பறிந்து சொல்லு வோரை சரசாஸ்திரிகளென்றும், குடிகள் கேட்கும் சங்கதிகளைத் தங்கள் யூகையாலும், விவேகப்பெருக்கினாலும் குறிப்பறிந்து சொல்லுவோர்களை குறிச்சொல்லுவோ ரென்றும் வழங்கிவந்தார்கள்.

அக்காலத்திலிருந்த சில பெரியோர்கள் பொய்க்கப்படு , வஞ்சினம், சூது முதலிய துற்குணங் களில்லாமல் இல்லறவாழ்க்கையிலிருந்தார்கள். அவர் களுக்குள்ள அருள் நிலையே ஜாக்கிரமாகவும், மருள் நிலையே சொர்ப்பன மாகவும், இருள் நிலையே சுழுத்தியாகவும் கொண்டிருந்தார்கள்.

இவைகள் மூன்றும் மக்கள் விழிப்பில் நிகழும் நிகழ்ச்சிகளேயாகும். விழிப்பிலிருந்தும் தன்னை மரந்த மயக்கத்தால் மருளடைந்து மக்கள் வினாக் களுக்கு விடை பகர்வார்கள். அவற்றுள் செல்கால நிகழ்கால சங்கதிகள் மட்டிலுஞ் சிலது சரிவர நிகழும் வருங்கால வாய்ப்பொய்யேயாகும்.