பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /15


மக்கள் மற்றுமோர்க் குறியறிதல் யாதெனில், அம்மன் பரிநிருவாண மடைந்த காலத்தில் உச்சியின் வழியாய் வளர்ந்து மறைந்த சோதியின் ஆதரவைக்கொண்டு பச்சோலை பந்தலிட்டு ஓர் கரகத்தைப் புட்பத்தால் அலங்கரித்து அதன் மீது தீபத்தை ஏற்றிவைத்து அம்மன் சிறப்பை வர்ணிப்போராகிய வன்னிப்போர், வன்னியரென்பவர் உடுக்கையென்னும் கருவியைக் கையிலேந்தி மாறியை அகற்றிய மகமாயி யாங்கள் கோரிய கோரிக்கை ஈடேறுமாயின் சிந்தாதீபம், சிந்தாவிளக்கு அலையாமல் நின்று ஓங்கி வளரவேண்டுமென்று உடுக்கையைத் தட்டி வன்னிப்பார்கள். அவ்வன்னிப்பின் கோரிக்கை நிறைவேறுமாயின் தீபம் ஓங்கி வளருவதுண்டு. அவர்கள் கோரிக்கை நிறைவேறாமற் போவதாயின் தீபம் வளராது நிலையில் நிற்பதியல்பாம்.

இஃது அம்மனை உடுக்கைகொண்டு வர்ணிக்கும் வன்னியர்களால் அளிக்கும் குறியென்னப்படும். இத்தகைய குறிகளையே பூர்வகாலத்தில் கேட்கும் குறிப்பைச் சொல்லலென்றும், குறி சொல்ல லென்றும், குறியென்றும், மருளென்றும் வழங்கி வந்தார்கள்.

இதன் நடைவரிசைகளைக்கொண்டே, "பூர்வ யதார்த்த பிராமண ஆதாரங்கொண்டு தற்கால வேஷப் பிராமணர்கள் விருத்தி யடைவது போல் " பூர்வம் மருளென்றும் குறியென்றும் வழங்கிவந்த வார்த்தை ஆதாரங்கொண்டு பொய்க்கப்படு, வஞ்சினம், சூது இவைகள் நிறைந்தோர் சிலர் தங்களாலாகாது தங்கள் மீது ஓர் தேவதை வந்ததென்றும், மருள் என்பது ஒன்று வந்ததென்றும் வாய்ப் பொய்க்கூறி வயிறு வளர்க்கின்றார்கள்.

அஃதெவ்வகையதென்னில், மதுரைவீரன் குறிமேடை என்றும், மகமாயி யின் குறிமேடை என்றும், கருப்பண்ணன் குறிமேடை என்றும் அலங்கரித்து பூசை நெய்வேத்தியமென்னும் ஜாலங்களைச் செய்து பேதை மக்களுக்குக் குறிச்சொல்லுமிடமென்று வகுத்துவிட்டுப் பாலியப் பெண்களில் நாலைந்து பெயரையும் புருஷர்களில் நாலைந்து பெயரையும் துணையாக சேர்த்துக் கொண்டு குறிக்கேழ்க்கவரும் மக்களிடம் ஒவ்வொருவர் கலந்து கொண்டு தாங்களும் குறிகேழ்ப்பதற்கு வருவது போல் தங்களுக்குள்ள குறைகள் ஈதென்று பொய்மொழிகட்கூறி யதார்த்தத்தில் குறிகேழ்க்கவருவோர் எண்ணங்களைக் கவர்ந்து வந்து மேடையின் பின்புறஞ்சென்று குறிச்சொல்லு வோனிடம் சொல்லிவிடுவார்கள். உடனே குறிச் சொல்லுவோன் மேடைகுலுங்க ஓர் ஆட்டமிட்டு மைந்தனே, மகளே இன்னகிராமத்தினின்று இன்ன செய்தி கேழ்க்க வந்திருப்பவன் யார் வரலாமென்று கூச்சலிடுவான். திடீலென்று தான் எண்ணிவந்த சங்கதியை சுவாமி சொல்லி அழைத்து விட்டபடியால் இனி சுவாமி சொல்லுவது யாவும் மெய்யென்று நம்பி விழுந்து விழுந்து கும்பிடும் பேதைமக்கள் சுவாமி கேட்கும்படியான சாராயம், கள்ளு, ஆடு, கோழி முதலியவைகளைக் கொடுத்து அல்லலடைகின்றார்கள்.

இத்தியாதிக் குறைகள் யாவும் பேதைமக்களுக்குள்ள விசாரணைக் குறைவேயாகும். வேதாந்தி களிற் சிலரும் அவர்களை நம்பித் தொழுது வருகின்றார்களென்னில் அவர்கள் வேதம் இன்னதென்றும் வேதாந்தம் இன்னதென்றும் அறியா வேஷவேதாந்திகளே யாவர். பொய்யை மெய்யென்று கூறி வேதாந்திகளென நடிப்பவர்களாதலின் பொய்யை மெய்யாகக் குறிச்சொல்லுவோர்களைக் கொண்டாடி வருகின்றார்கள். ஆதலின் நமது புத்ததன்மப்பிரியர்கள் ஒவ்வொருவரும் யாது செயலைக் காணினும் அவற்றை தேறவிசாரித்து காரியாதிகளை நடத்தும்படிக் கோருகிறோம்.

மருள் என்பது மயக்கம், குறிஞ்சி நாட்டின் வீணையோசையால் மயங்கும் ஓர் நிலைக்கும் பேராம். மருளர் என்பது ஓராட்சரிய சப்தத்தைக் கேட்ட விடத்தும் ஓர் நூதன வஸ்துவைக் கண்டவிடத்துந் திடுக்கிட்டு நிலைபிறழ்வோர் களை மருளரென்று கூறப்படும்.

- 2-18; அக்டோபர் 14, 1908 -