பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


வெண்மயிரைக் கறுப்பு நிறமாக்க முடியாதென்று கூறியுள்ளார். அங்ஙனம் ஓர் மயிரின் நிறத்தை மாறுபடுத்தக்கூடாத மனிதன் மற்றோர் மனிதனைக் கெடுக்க வேண்டுமென்றும், அவனது கீர்த்தியை அழிக்கவேண்டுமென்றா யினும் முயலில் அவ்வெண்ணம் முடிவு பெறுமோ ஒருக்காலு முடியாவாம்.

எங்ஙனமென்பீரேல், அவனுக்குள்ள நற்கிரித்தியச்செயலால் சுகமும், கீர்த்தியும் பெருகிநிற்க துற்செயலுந் துன்மனமுங் கொண்டோன் அவனைக் கெடுக்க முயல்வானாயின் அக்கேடுகெடுக்க எண்ணுவோனையே சூழ்ந்து கெடுக்குமென்பது சத்தியம் சத்தியமேயாம்.

- 3:16; செப்டம்பர் 29, 1909 -

31. பகவனது அஸ்தியாலும் சாம்பலாலுங் கொண்ட மகத்துவம்

தென்னிந்தியாவில் சரித்திர ஆதாரவின்றி நூதனமாகத் தோன்றி யுள்ள பராய மதஸ்தர்களும், அப்பராய மதஸ்தர்களை தம்மதஸ்தர்களெனப் பின்பற்றித் திரியும் போலி மதஸ்தர்களும் புத்தரது சரித்திரங்களை சீரே உணராமலும், அவரது தன்மங்களைக் கண்டு தேராமலும் தங்களது அசத்திய மொழிகளால் பௌத்தர்களை ஜெயித்துவிட்டோமென்றும், தங்களது அசப்பியமொழிகளால் பௌத்தர்களை தூஷித்துக்கொண்டும், தங்களது துன்மார்க்க மொழிகளால் பௌத்தர்களது தலையைத் தத்தி விட்டோ மென்றுங் குறைக்கூறி திரிவோர் தற்காலம் (பேகார் மாகாணத்தில்) கூடியுள்ள மகமதியகனவான்களுடையவும், இந்து கனவான்களடையவுமாகிய அன்பின் பெருக்கத்தையேனும் உணர்ந்து புத்தரையும், புத்தரது தன்மத்தையும் பொய் யென தூஷித்துப்பாழைடையாது புகழ்பெறுவார்களென்று நம்புகிறோம்.

அதாவது, பெஷாவாரென்னுந் தேசத்தில் பிரிட்டிஷ் ஆர்ச்சலாஜிக்கல் சர்வேயர்களால் கண்டெடுக்கப்பெற்ற பகவனது அஸ்தியையும் சாம்பலையும் அநுசரித்து,

பேகாரென்னும் மாகாணத்திலுள்ள மகமதிய கனவான்களும், இந்து கனவான்களும் சென்றவாரம் பெருங்கூட்டமிட்டு அக்கூட்டத்திற்கு ஓர் மகமதிய கனவான் சையத் அசேன் இமாம் அவர்களை சபாநாயகராக வீற்றிருக்கச்செய்து புத்தரது அஸ்தியை கண்டெடுத்த இடத்திலேனும், புத்த கயாவிலேனும் வைக்கவேண்டுமேயன்றி மற்றயிடங்களுக்குக் கொடுக்கலாகா தென்று தீர்மானித்தார்கள்.

இக்கூட்டத்திற்கு மகமதிய கனவான்கள் விசேஷமாக வந்திருந்ததுமன்றி புத்தருடைய தன்மங்களைப்பற்றியும் சிலாகித்தது மிக்க மகத்துவமேயாம். மௌலி பக்கிருடீனென்பவர் இஸ்லாம் நீதி மார்க்கங்களைப் பற்றியும், பௌத்த தர்மத்தையொட்டியும் சிலாகித்துப் பேசினார்.

பெளத்த தன்மத்திற்கும், இஸ்லாம் போதனைக்கும் பொதுவான விஷயம் அநேகமிருக்கின்ற தென்று எடுத்துக் காட்டினார். சபாநாயகராகிய சையத் அசேன் இமாம் எழுந்து புத்தரது மகத்துவத்தை மிக்க உற்சாகத்துடன் பேசி தங்கள் தீர்க்கத்தெரிசிகளில் ஒருவராக எண்ணுவதாகவுங்கூறி தான் ஓர்பௌத்த மதஸ்தன் அல்லவென்று அவரால் உண்மெயாக சொல்ல முடியாதென்றுங் கூறி முடித்தார். (செப்டம்பர் மாதம் 25ம் நாள் இஸ்டாண்டார்ட் பத்திரிகையைக் காண்க).

- 3:17; அக்டோபர் 6, 1909 –

32. முயற்சி திருவினையாக்கும்

எனும் முதுமொழிக்கிணங்க நாம் சீர்பெற வேண்டுமென்னு முயற்சியிலும், நாம் எடுத்த காரியம் செவ்வனே முடியவேண்டுமென்னு முயற்சியிலும் நோக்கமுள்ளவர்கள் விரோத கட்சியோரையும், வீண் வார்த்தைப் பேசுவோரையும் மதியாது தங்கள் கஷ்டநஷ்டங்களையுங் கருதாது அவமானம் வெகுமானமென்னும் பேற்றையும் விரும்பாது கீர்த்தி அபகீர்த்தி என்னுஞ் சிறப்பையும் நோக்காது எடுத்த சுபகாரியங்கள் மீது கண்ணோக் கமும் கருத்துமாயிருந்து முற்றும் சீர்பெற முடிப்பதே அழகாகும்.