பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


அதன் அனுபவத்தைத் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் மதுரையி லுள்ள ஆலயங்களின் கற்சுவர்களில் வரைந்துள்ள படங்களால் விவரமாகத் தெரிந்துக்கொள்ளலாம். ஈதன்றி முள்ளு பீப்பாக்களிலடைத்து சகலருங் கண்டு நடுங்கும்படி உருட்டிக் கொலை புரிந்து வந்ததாகவுந் தெரிய வருகின்றது.

இவ்வகையாய்க் கொடுங்கோலால் ஆண்டு வந்தவர்களை கருணை தங்கிய ஆங்கிலேய அரசாட்சியார் செங்கோலால் தங்கள் தெண்டனை கொடுத்து வருவதினால் மேலு மேலும் சத்துருக்கள் தோன்றுகின்றார்கள். அவர்கள் செய்துவருங் கொடுங்கொலைகளுக்குத் தக்கவாறு சகலருங் கண்ணினாற்கண்டு நடுங்கும்படியானக் கொடுங்கொலைப்புரிவது நியாய மாகும். மற்றப்படி செங்கோல் தண்டனையாம் தூக்கிலிட்டுக் கொலைச் செய்வதினால் அதை ஓர் அலட்சியஞ் செய்யாது தங்கள் வஞ்சத்தைக் காட்டுகின்றார்கள்

அத்தகைய வஞ்சகர்களை அடக்குவதற்கு சகலருங் கண்டு பயங்கொள்ளும்படியான கொடுங்கோல் கொலை தண்டனையே புரிதல் வேண்டும் இவ்வகையானக் கொடுந்தண்டனையை நமது தேசத்தோரே முன்னின்று செய்விக்கும்படி ராஜாங்கத்தோருக்குத் தெரிவித்தல் வேண்டும். நமது தேசத்தோர் இவற்றிற்கு முன்னின்று தக்க தண்டனையைக் கோறாமல் மௌனத்திலிருப்பார்களாயின் ஒருவன் செய்த குற்றத்தால் ஊரா ரனைவர் மீதும் சந்தேகத்திற்கிடமுண்டாக்கிவிடும். கெடுங்கோலை நடாத்தும்படிச் செய்யுங்கள், செய்யுங்கள்.

- 3:29; டிசம்பர் 29, 1909 -

37. பிரேதமெடுத்துப் போகுங்கால்

வினா : ஐயா, எச்சாதிகளிலுமில்லாத ஓர் வழக்கம் சாதிபேதமில்லாக் கூட்டத்தோரிடங் காண்கின்றேன். அவை யாதெனில், இக்கூட்டத்தோர் பிரேதமெடுத்துப் போகுங்கால் கூத்தாடிக்கொண்டும், பாட்டுப்பாடிக் கொண்டும், வீண்கலகத்தைப் பெருக்கிக்கொள்ளுகின்றார்களே இதன் சார்பென்னை. எம்மதசார்பை அநுசரித்து இக்கூத்தாட்டமாடுகின்றார்கள். இவற்றை அடியேனுக்கு விளக்கும்படிக் கோறுகிறேன்.

பி.எம். தருமலிங்கம், பெங்களூர்.

விடை : அன்பரே, பலப்பிணி அவத்தையால் பிரேதமானாரென்பதில் துக்கமும், பலப் பற்றற்று பிணியற்று பரிநிருவாணமடைந்தாரென்பதில் ஆனந்தமுங் கொண்டாடுவ தியல்பாம்.

இவற்றுள் நமது ஜகத்தீசனாகவும், ஜகத்குருவாகவும் விளங்கிய புத்தபிரான் காமனையுங் காலனையும் வென்று நிருவாணம் பெற்றபோது சகலமுந் தனக்குளறிந்து பிறப்பிறப்பற்று சுகநிலையும் நித்தியமுமடைந்த வற்றை உலகெங்கும் சுற்றி சீவர்களுக்கும் விளக்கி அவர்களையும் அப்பிறப்பறுத்து சுகநிலை பெறும் மார்க்கத்தில் விட்டு புளியம் பழம்போலும், அதன் ஓடுபோலும் புழுக்களே கூடாய்திரண்டு பட்சியாய் வெளிவருவதுபோலுந் ததாகதர் தேகத்தினின்று சோதிமயமாய் வெளி தோன்றி பரிநிருவாணமுற்றபடியால் மரணத்தை ஜெயித்து நித்தியமுற்றப் பெருஞ்செயலை அறிந்த விவேகமிகுத்த சங்கத்தோரும், இந்திய சாக்கையவரசர் களும் அவரது தேகத்தை தகனஞ்செய்ய எடுத்துப்போம்போது ஆனந்தக் கூத்தாடிக்கொண்டும், அவர் மரணத்தை ஜெயித்து பிறவியற்ற நிலையைப் பாடிக்கொண்டுஞ் சென்றதாக சங்கறர் அந்தியகால சரித்திரங் கூறுகின்றது.

அச்செயலை அநுசரித்துவந்த புத்தசங்கத்தோரும், பௌத்தக் குடிகளும், சமணமுநிவர் களுக்குள் மரணத்தை ஜெயித்து பிறப்பிறப்பற்ற பரிநிருவாணம் பெற்றவர்களாயிருப்பினும் மரணத்திற்குள்ளாகி பிறப்பிறப்பிற் சுழல்வோரா யிருப்பினும் அவர்களது தேகத்தைத் தகனஞ்செய்ய எடுத்துப் போகுங்கால் தோரணக் கொடிகள் முதலானதைப் பிடித்துக்கொண்டு ஆனந்த வாத்திய கோஷத்துடன் பஜித்துங் கூத்தாடிக் கொண்டுபோவது வழக்கமாயிருந்தது.