பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

ஐன்பது அறுபது ரூபாயிற்குள் சென்னையின் மத்தியில் ஓர் வாடகை வீடெடுத்து அன்னிய தேசச் சரக்குகளிற் சிலதை தருவிப்பதுடன் (இந்தியன் காண்டிமென்ஸ்) என்னும் மளிகை சரக்குகளையும் தருவித்து வைத்துக் கொண்டு அதே கட்டிடத்தில் தையல் வேலை, தச்சு வேலை, தகர வேலை, பிரம்பு வேலை முதலியக் கைத்தொழில் சாமானங்களையும், அத்தொழில் உபாத்திமார்களையும் ஷேர்ஹோல்டர்களின் சிறுவர்களையும் அதனுள் சேர்த்து வைத்து கருணை தங்கிய நமது கவர்னரவர்களுக்கும் மற்றுமுள்ள துரைமக்களுக்கும் விண்ணப்பமனுப்பி, வியாபார சங்கத்திற்கு வரவழைத்து ஏழைகளுக்குத் தக்க சிறு விருந்தளித்து இவ்வியாபார சங்கத்துக்கும், சிறுவர்களின் கைத்தொழில் விருத்திக்கும் நமது கவர்னரவர்களையே (பேட்ரனாகக்) கேட்டுச் கொள்ளுவதுடன் மற்றுமுள்ள துரைமக்களையும் இச்சங்கத்தின் மீது நோக்கம் வைத்து, ஆதரிக்கும்படியாகக் கேட்டு வணங்கிக் கொண்டு வியாபாரத்தை நடாத்தும்படியான ஆலோசினையிலிருக்கின்றோம்.

இன்னும் இச்சங்கம் நிலைநிற்கத்தக்க ஆலோசினையையும் உப கருத்துகளையும் அளிப்பரேல் அனந்தானந்த வந்தனத்துட னேற்று வியாபார சங்கத்தை விருத்தி செய்யக் கார்த்திருக்கின்றோம். இச்சங்கத்திற்கு ஆயிரம் ஷேர்ஹோல்டர்கள் பெயர்கள் கிடைத்தவுடன் சட்ட புத்தகத்தில் அவர்கள் பெயர்களையுங்கண்டு ரிஜிஸ்டர் செய்து ஷேர்ஹோல்டர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் சட்டபுத்தகம் அனுப்பப்படும்.

- 3:45; ஏப்ர ல் 20, 1910 -

47. நாமம்

வினா : ஐயா! இந்துக்களில் சிலர் நெற்றியில் மூன்று நாமமும், சிலர் இரண்டு நாமமும், சிலர் ஒரு நாமமும், சிலர் திருநீறும் வைக்கிறார்களே அதேனென்று அனேகரை கேட்டும் தக்க பதில் கிடைக்கவில்லையாதலால் பிரிய பத்திராதிபர் அவர்கள் இதன் தாற்பரியத்தை அடியேனுக்கு விளக்கி யருளுவதோடு தமது புத்த மதத்திலும் அவ்வித நாமங்களாவது திருநீறாவது நெற்றியில் வைக்கலாமா என்பதையும் தெரிவிக்கக் கோருகிறேன்.

எல்.பி.சி. ஆரோக்கியசாமி, உமணமா நகர் , கோயமுத்தூர்.

விடை : அன்பரே, தாம் வினாவியுள்ள சங்கைகளில் விபூதியின் விவரங்களையும், ஸ்ரீ பாதமாம் நாமத்தின் விவரங்களையும் நமது பத்திரிகையில் முன்பே விளக்கியிருக்கின்றோம். கண்டுகொள்க. சைவம், வைணவம், வேதாந்தம் என்னும் சகலப்பிரிவுகளும் புத்த தன்மத்தினின்றே தோன்றியவை களாகும். சரித்திராதாரங்களின்படி சித்தார்த்தர் தேகதகன சாம்பலே மாபூதியென வழங்கி தற்காலம் விபூதியென்றும் அதனை அணைவோர் சைவரென்றும் வழங்கி வருகின்றார்கள்.

தாமரை ரேகையுள்ள ஸ்ரீபாதமாம் சித்தார்த்தரது பாதத்தையே இராமானுஜர் காலத்தில் விஷ்ணுபாதமென்று கூறி அதனை தாமரை கமலத்தின் மீது நிறுத்தி தங்கள் கூட்டத்தோர் நெற்றியிலும் அணையச்செய்து சாத்தியமாம் தன்ம சங்கத்தோரை சங்காக்கி அதனிடபுரத்தில் வைத்து அறவாழியாம் தன்மசக்கரத்தை சக்கரமென அதன் வலபுரத்தில் வைத்து பூசிக்கும் நூதன வழி செய்துவிட்டார்.

வேதாந்திகளோ, புத்ததன்ம திரிபீடமாம் திரிபேதத்தினின்று விளங்கும் உபநிட்சயார்த்தமாகும் வேத அந்தத்தின் ஆதாரங்களையே மாறுபடுத்திக் கொண்டு வேதாந்திகளென வெளிதோன்றி விட்டார்கள்.

புத்ததன்மத்தினின்றே பகவத்கீதை தோன்றியுள்ளதும் சங்கராச்சாரியின் வேதாந்தந் தோன்றியுள்ளதுமாகியச் செயல்களை அதனதன் உற்பவ காலவரை களைக்கொண்டும் அந்நோர் நூற்களிலுள்ள நீதிபோதங்களைக் கொண்டுமே எளிதில் அறிந்துக்கொள்ளலாம்.

- 4:1; சூன் 15, 1910