பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 37

அத்தகைய சீர்திருத்தச் செயல்களானது செல்லல், நிகழல், வருங்கால மென்னும் முக்காலங்களையும் பொருந்தியதேயன்றி செல்காலத்தை மட்டிலுங் குறித்ததன்று.

புத்தபிரான் தனது வாலவயதிலேயே மாமிஷம் புசிப்பது கொடிதென்று தன் தந்தையிடம் வாதிட்டிருக்கின்றார். ஆதலின் மாமிஷம் புசிப்போர்கள் செல்காலத்திலும் நிகழ்காலத்திலுமிருந்தே யிருப்பார்கள். அதுகண்டே மீன் வாணிபரென்றும், புலைவாணிபரென்றும் சரித்திரங்களில் வரைந்திருக் கின்றார்கள். அவர்களைக் கண்டித்து சீவகாருண்யத்தைப் பெருக்குவதற்காக பௌத்த சாஸ்திரிகள் பௌத்த அரசர்களை அடுத்து கொலையையும் புலையையும் மறுக்கத்தக்க மார்க்கங்களை நிலைக்கச்செய்தார்கள். அம் முயற்சியால் கொலையும் புலையுந் தவிர்த்து சீவகாருண்யம் பரவியிருந்தது.

அவற்றிற்குப் பகரமாய் ஆரியரென்றும், மிலேச்சரென்றும் அழைக்கப் பெற்ற ஓர் கூட்டத்தார் இத்தேசத்திற் குடியேறி தாங்கள் தங்கள் தேசத்தில் புசித்திருந்த மாமிஷ பட்சணங்களைப் புசிப்பதற்கு ஏதுவில்லாமல் பௌத்தர் களுக்குத் தெரியாது மறைவில் அக்கினியை வளர்த்தி ஆடுகளையும், மாடுக ளையும், குதிரைகளையும் சுட்டுத் தின்றிருக்கின்றார்கள். அவைகளையும் அறிந்த பௌத்தர்கள் மிலேச்சர்களை அடித்துத் துறத்தி சீவகாருண்யத்தைப் போதித்ததின் பேரில் உயிருடன் நெருப்பிலிட்டுக் கொன்று தின்னும் மாமிஷ இச்சையை ஒழித்து சீர்பெற்றார்கள். ஆதலின் பெளத்ததன்மம் பரவியிருந்த இடமெங்கும் கொலை புலை அகன்றும் பௌத்ததன்மம் இல்லா இடங்களில் கொலையும் புலையுமிருந்தே இருக்கலாம். அதுகொண்டே வழி நூலாசிரியர் மாமிஷம் புசிப்போ ரிராவிடில் அதனை விற்போ னிரானெனத் துணிந்து கூறியுள்ளார்.

- 4:10; ஆகஸ்ட் 17, 1910 –

54. எல்லாமுடையான் குருவாதலும், ஏதுமில்லாதான் குருவாதலும்

எல்லாம் உடையானென்னும் சக்கிரவர்த்தி பீடமும் இரதகஜ துரக பதாதிகள் நிறைவும் தனசம்பத்து தானிய சம்பத்தின் பெருக்கும் மனைவி மைந்தன் சுகமும் அரசாங்கத்தோ ரன்புமளாவிய பெரியோன் சகலவற்றையும் வெறுத்து வெளியேறி மண்ணாசையற்று பெண்ணாசையற்று பொன்னாசை யற்று பற்றுக்களை அறுத்துபிறவி துக்கம் பிணி துக்கம் மூப்பு துக்கம் மரண துக்கம் நான்கையும் போக்கித் தன்னிற்றானே கண்டடைந்த சுகவாரி நிலையாம் பரிபூரண சுகத்தை உலகிற்றோன்றியுள்ள சகல மனுக்களுக்கும் போதிக்குமாறு சக்கரவாளமெங்கணும் சங்கங்களை நாட்டி அறத்தை ஊட்டிய ஆச்சாரியனாம் ஜகத்குருவாக விளங்கிய புத்தபிரான் தனது கருணா பற்றினால் உலகெங்குஞ் சுற்றி சங்கங்களுக்கு அறத்தைப் போதித்த ஆச்சாரியாகிய சங்கராச்சாரி என்னும் பெயரும் பெற்று ஆயிரநாமங்களால் உலகிலுள்ள சகல மனுக்களுங் கொண்டாடி வந்ததுமன்றி தற்காலம் உலகிலுள்ள மனுமக்களில் அரையே அரிக்கால்பாகம் சங்க அறர் போதனைக் குட்பட்ட பௌத்தர்களே விளங்குகின்றார்கள்.

சங்க அற ஆச்சாரியாம் புத்தபிரான் ஒருவரே எல்லாமுடைய தலைத் தார்வேந்தராயிருந்தும் அவற்றைத் துறந்து மநுமக்களை ஈடேற்ற வேண்டு மென்னுங் கருணையின் மிகுதியால் கரத்தில் ஓடேந்தி கிடைத்த வன்னத்தைப் புசித்து ஆடை சுகம், ஆபரண சுகம், சயன சுகம் அறு சுவை சுகம் யாவையும் வெறுத்து சகல மனுக்களுக்கும் மெய்ப்பொருளுரைத்து தன்சுகங் கருதாது பிறர் சுகங் கருதி ஜகத்குரு சங்க அற ஆச்சாரியராக விளங்கினார்.

தற்காலம் அத்தகைய சங்கங்களும் இத்தேசத்திலில்லை. அச்சங்கங் களுக்கு அறத்தைப் போதிக்கும் ஆச்சாரியர்களுமில்லை. ஆதலின் ஜகத்குரு சங்கராச்சாரியின் வரிசையோர்களுமில்லை. சங்கங்களுக்கு ஊட்டிய அறமாம் சத்தியதருமமு மாறியுள்ளதென்பது துணிபு.

சங்க மித்தர் சங்க தருமர் சங்க அறர், என்னுங் காரணப்பெயரை உடைத்தானவரும் அதன் போதனாசிரியருமானவரே சங்கறாச்சாரியாவர். அவரது மெய்யறத்தைப் பின்பற்றி மற்றப் பற்றுக்களையற்று கரத்திலோடேந்தி பிச்சையிறந் துண்டு இவன் பெரிய சாதியோன், அவன் சிறிய சாதியோன்,