பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

தண்டியலங்காரம்

ஆகம மென்பன மநுமுதலாகிய வறனொடு புணர்ந்த திறனறிநூலே

- 4:30; சனவரி 4, 1911 –
 

68. புத்தர் பிறப்பு

வினா : பௌத்த நூலாகிய நீலகேசித் திரட்டுரையிலே காட்டப்பட்ட உலோகவசனம் என்னும் நூலில்

புத்தன்றாய் நண்டிப்பி வாழை புனமூங்கில் / கத்தும் விரியன் கடுஞ்சிலந்தி-யித்தனையும்
வேலாலும் வாளாலும் மனறியே தாங்கொண்ட / சூலாலே தம்முயிர்க்குச் சோர்வு

என புத்தர் தாய்மாரையுஞ் சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கின்றது ஆனதால் சந்தேகந்தோன்றி இதினந்தரார்த்தத்தை விளக்கி யாட்கொள்ளும்படி வேண்டுகிறேன்.

எஸ்.சி. அதிரூபநாதன், சர்க்குலர் ஷாப்ட்.

விடை : அன்பரே தாம் வினவியுள்ள சங்கை வீணதேயாம். அதாவது "உலகவசன" மென்னும் பெயரினாலையே அஃது சரித்திரமன்று. உலக வதந்தியென்றே கூறல் வேண்டும். உலகத்திற் பொய்யைச்சொல்லிப் புலம்பித் திரியுங் கட்டுக்கதைகளில் இதுவுமோர் கற்பனா கதையேயாகும். கலிவாகு, குலவாகு, வீரவாகு, இட்சுவாகு என்னும் சக்கிரவர்த்திகள் வம்மிஷவரிசையில் சித்தார்த்தி என்னும் ஏகபுத்திரன் பிறந்து வளர்ந்து அசோதரை என்னும் மலையரசன் புத்திரியை மணந்து இராகுலனென்னும் ஓர் புத்திரனையும் பெற்று பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்குவகை துக்கத்தை ஜெயிப்பான் வேண்டி துறவு பூண்டு தன்னை ஆயும் சதாவிசாரிணையினாலும், அன்பின் மிகுதியினாலும், மெய்ப்பொருள் அறிந்து திராவிட பாஷையில் மெய்யர் மெய்கண்ட தேவரென்றும், சகட பாஷையில் புத்தரென்றும், வழங்கியப் பெயர் சகல சரித்திரங்களிலுந் தெள்ளற வரைந்திருக்கப் புத்தர்கள் யாவரும் தாயின் விலாவழியிற் பிறந்து தாய்மார்கள் நண்டைபோலும், தேளை போலும் உடனே மரிப்பரென்னும் பெரும் பொய்யை விவேகிகள் நம்புவரோ ஒருக்காலும் நம்பமாட்டார்கள்.
இவ்வுலக வசனமென்னுங் கட்டுக்கதை தோன்றிய காரணம் யாதெனில், விஷ்ணுவென்னும் ஓர் தேவனுண்டென்றும், அத்தேவனே புத்தராக அவதரித்தாரென்றுங் கூறிவருங் கட்டுக்கதை நழுவாவகைக் கீதோர் முட்டுக்கதையென்றே கூறல்வேண்டும்.
தற்காலமுள்ள விவேகமிகுத்த மேன்மக்கள் யாவரும் புத்தரைப்பற்றி ஆனந்திக்குங் காரணம் யாதெனில், அவர் நம்மெய்ப்போன்ற மனிதனாகப் பிறந்தும் தனது சக்கிரவர்த்திப் பீடத்தையும், அரிய மனைவியையும், மகவையுந் துறந்து மனமாசற்று கண்டடைந்த ஞானத்திற்கும், அளவுபடா அன்பின் மிகுதிக்கும், மலைவுபடா திருவாக்குக்குமேயாம். மற்று மாறாக அவர் விலாவழியாய் பிறந்தார் விஷ்ணுவே அவதரித்தாரென்பாராயின் அச்சரித்திரத் தைக்காணும் எவரும் ஆனந்திக்கமாட்டார்கள்.
மனுமகனாகவே பிறந்து மனுமகனாகவே வளர்ந்து மனமாசகன்று அறிவு முதிர்ந்து அவரது நற்செயலால் தேவனென்னும் பெயரும், புத்தரென்னும் பெயரும், திருமாலென்னும் பெயரும், பரமென்னும் பெயரும், ஈசனென்னும் பெயரும், பெற்றாரன்றி அவர் பிறந்தபோதே புத்தரென்றும், தேவரென்றும் கொண்டாடியப் பெயர்கள் கிடையாது.
ஆதலின் அவர் நம்மெய் போன்ற மனிதனாகப்பிறந்து நமக்கே மெய்க் குருவாகத் தோன்றியபடியால் குருவையே தெய்வமாக சிந்தித்து அவரது சொற்படி நடந்து வருகின்றோம். மனுமக்களில் தற்காலமெவராயினும் நான்கு வகை துக்கங்களை செயித்து மெய்ப்பொருளைக் கண்டடை வார்களாயின் அவர்களையும் புத்தரென்றே கூறலாகும்.

நிகழ்காலத்திரங்கல்

தேனடரு மானந்த செங்கமலத் தாளருள / மானிடர்போல் மண்மிசையில் வந்த ததிசயமே.

- 4.31; சனவரி 11, 1911 -