பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 /அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

ஓர் தேவனே மனிதனாக அவதரித்தாரென்றும் வரைந்திருக்கும் அத்தகைய கற்பனைகளைக் கண்ணுற்று பாராமலும், அக்கதைகளை செவியுற்றுக் கேளாமலும் அகற்றும்படி வேண்டுகிறோம். அத்தகையக் கதைகள் யாவும் மதக்கடைபரப்பி மக்களை பயமுறுத்தி பொருள் சம்பாதிக்கும் பொய்க் குருக்களின் வாக்கும் அவ்வாக்கை நம்பி சாமிகளுக்கும் சமய குருக்களுக்கும் இலஞ்சமளித்து தங்கள் பாவத்தைப் போக்கிக்கொள்ள முயல்வோர்களின் போக்குமேயாதலின் உண்மெய்க்கண்டடையவேண்டிய பௌத்தர்கள் அவற்றைப் பாராமலும் கேளாமலுமிருக்க வேண்டுமென்பது ஞானகருத்து.

- 4:38; மார்ச் 1, 1911 -

70. அன்னை சாதத்தை ஊட்டுவாள் விழுங்கவுஞ்செய்வளோ

ஒருக்காலுஞ்செய்யாள். குழவி தானே விழுங்க வேண்டியதுதான். அதுபோல் நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியால் விளைந்துவரும் சுகங்கள் சொல்லத்தரமன்று அவர்களரசாட்சியில் இந்திய தேசத்தில் நிகழ்ந்துவரும் வித்தியாவிருத்திகளையும், கல்வி விருத்திகளையும், நாகரீக விருத்திகளையும் நாம் கவனியாது சுயப்பிரயோசன சோம்பேறிகளின் வார்த்தைகளை நம்பி சாமிகொடுப்பார் சாமிகொடுப்பாரென்னுங் கடைச் சோம்பேறிகளாகி விட்டதுமன்றி சாமிகளுக்கு லஞ்சம் பொய்க் குருக்களுக்கு லஞ்சங் கொடுத்து உத்தியோகம் பெற்றுக்கொள்ளவும் பிணிகளைத் தீர்த்துக் கொள்ளவும், ஆபத்தைப் போக்கிக் கொள்ளவும் முயலுகின்றவர் களாதலின் பிரிட்டிஷ் ஆட்சியாரது வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்தை விரும்பாது சாதி பொறாமெய், சமயபுரட்டு, நீதிக் குறைவு, நெறியின் தவருதலாகிய அஞ்ஞானத்தினின்று பேராசையால் பிதற்றித் திரிகின்றோம். பிரிட்டிஷ் ஆட்சியாரின் வித்தைகளின் சிறப்பை அறியவேண்டில் இரயில்வே, டிராம்வே, டெல்லகிராப், லெத்தகிராப், போனகிராப் முதலிய வித்தைகளின் விருத்திகளைக் கண்டு தெளியலாம். புத்தியை அறிய வேண்டில் நாளுக்குநாள் அவர்கள் புத்திவிருத்தியால் கட்டிக்கொண்டு வரும் மாடமாளிகை கூடகோபுர முதலியவை களும், நடையுடை பாவனா விருத்திகளும், வண்டி குதிரைகளின் சுகாவிருத்தி களும், பொய்மெயென்னும் பொம்மெகளும், மற்றும் விளையாட்டுக்கருவி களின் விருத்திகளும், உலாவுசுகம், உண்ண ல் சுகம், கண்காட்சி சுகம் முதலிய புத்தியாலுண்டாம் விருத்தியின் சுகங்களையுங் கண்டு தெளியலாம். ஈகையை அறிய வேண்டில் வியாதியஸ்தர்கள் படுங்கஷ்டங்களை அறிந்து அவைகளை நிவர்த்திக்க வேண்டி புருஷர்களுக் கென்றும் பெண்களுக்கென்றும் வைத்திய சாலைகளைக் கட்டி வருவதும், தங்களுடையக் குடிகள் தண்ணீருக்குப் படுங் கஷ்டங்களை உணர்ந்து வீதிக்குவீதி தண்ணீர் சுகமளித்துவருங் கருணையும் குடிகள் கல்வியற்று அஞ்ஞானவிருத்தி அடைகின்றார்கள் என்று உணர்ந்து கல்விசாலை விருத்திகளும், மக்கள் நடமாடுதற்குரிய வீதிகளின் சுகவிர்த்தி களையும், தீபங்களின் சுகவிருத்திகளையும் மற்றும் சுகாதார விருத்திகளையும் கருணையாம் ஈகையினால் உண்டாவதென்று உணர்ந்துக்கொள்ளலாம்.

சன்மார்க்கத்தை அறியவேண்டின் தன்னவரன்னியரென்னும் பட்சபாத மற்றும், தன்சாதியார் புறசாதியாரென்னும் பட்சபேதமற்றும், தன் சமயம் புறசமயமென்னுங் குரோதமின்றி துன்மார்க்கத்தோ ரென்னும் இரக்கமற்றவர்களாகக் காணாது நன்மார்க்கத்தோரென்னும் சன்மார்க்கத் திலேயே நின்று சன்மார்க்கமாம் நீதிநெறி ஒழுக்கங்களில் நிலைத்து தங்கள் குடிகள் யாவரையும் சன்மார்க்கத்தில் ஒழுகச்செய்துவரும் செயல்களைக் கொண்டே அறியலாம். இத்தகைய கருணைமிகுத்த ராஜாங்கத்தோர் நமக் கூட்டிவரும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் இவைகளைக் கிரகிக்காது கடைச்சோம்பேறிகளா உழல்வோமாயின் மேலுமேலுந் துக்கத்தை அனுபவிக்க வேண்டியதுடன் தேசச்சிறப்பு மற்றுப்போ மென்பது திண்ணம். ஆதலின் நமது தேயத்தோர் வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் விருத்தி பெருவார்களென்று நம்புகிறோம்.

- 4:43; ஏப்ரல் 5, 1911 -