பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /53

71. உலகத்தில் தாழ்ந்த வகுப்பார்கள் யார், அறிவீனர்கள் யார், தீண்டாதவர்கள் யார் ?

சுகதேகிகளாயிருந்தும் தங்கட் சோம்பலினால் பிச்சையிரந்துண் போர் தாழ்ந்த வகுப்போரா, உயர்ந்த வகுப்போரா, தங்களைத் தாங்களே உயர்த்திக்கொண்டு ஏனையோரைத் தாழ்த்துகின்றவன் அறிவுள்ளவனா அறிவில்லாதவனா . கபடு, வஞ்சினம், சூது, பொய், குடிகெடுப்பு, பொறாமெய், குஷ்டம், வைசூரி முதலிய தோஷம் நிறைந்துள்ளோன் தீண்டப்படாதவனா, அன்றேல் பூமியை உழுது சீர்திருத்தி தானியங்களை விளைவித்து சகலரது ஆயாசத்தையுந் தீர்ப்பவன் தீண்டப்படாதவனா. அந்தோ! அவனவன் குணத்திலும் செயலிலும் தாழ்ந்தவனா உயர்ந்தவனா என்று தன்னை ஆராயாது ஏனையோரைத் தாழ்ந்தவர்களென்று கூறுவது என்னமதியோ. தான் அறிவிற் சிறந்தவனா அறிவிற் குறைந்தவனா என்று தன்னை ஆராயாது ஏனையோர்களை அறிவில்லாதவர்களென்று கூறுவது என்ன விவேகமோ. தங்களுக்குள்ள வைசூரிரோகி, குஷ்டரோகி, வஞ்சகன், குடிகேடன், பொய்யன், கொலைஞன் முதலியோரைத் தீண்டிக்கொள்ளலாம் உழைப்பாளியும், சுத்ததேகி யுமானோனைத் தீண்டலாகாதென்பதென்னமதமோ இவற்றை விவேகிகளே ஆய்ந்தறிய வேண்டியதாகும்.
உலகெங்கும் சாதி பேதமென்னும் பொறாமெயற்று சுகசீவவாழ்க்கை பெற்றிருக்க இத் தென்னிந்தியாவில் மட்டிலும் அவன் தாழ்ந்த சாதி மனிதன், அவன் அறிவில்லாத சாதி மனிதன், அவன் தீண்டப்படாத சாதி மனிதனெனக் கூறி ஓர் பெருந்தொகைக் கூட்டத்தோரை இழிவுப்படுத்தி வருவது யாது காரணமென்னில், பொறாமெயும் பூர்வ விரோதமுமேயாம்.
தாழ்த்தப்பட்டுள்ளோர் விவேக செயலை சிறிய தாட்டாந்தத்தால் அறிந்துக்கொள்ளலாம். அதாவது தற்காலமுள்ள விவேக புருஷர்கள் யாவரும் இச்சாதிபேதச்செய்கைக் கொடிது கொடிதெனப் பேசிக் கொண்டே வருவது அநுபவப் பிரத்தியட்சமாகும்.
இந்த சாதி பேதம் வைத்துள்ளவர்களுக்கு எதிரிடையான தாழ்ந்த வகுப்பார் அறிவில்லாதவர்கள், தீண்டப்படாதவர்கள் என்று அழைக்கப் பெற்றார் சாதி பேதமென்னும் பொறாமெய்ச் செயலை தங்கள் கூட்டத் தோருள் அநுசரியாமலும் மனிதர்களை மனிதர்களாகப் பாவித்தும் தேகத்தை வருத்திப் புசித்தும் வரும்படியானவர்கள் விவேகிகளா அன்றேல் சாதிபேத மென்னும் பொய்க்கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு மனிதருக்குள் மனிதர்களைத் தூஷித்து தாழ்ந்தவர்கள், அறிவில்லாதவர்கள், தீண்டப்படாதவர்களென்றுக் கூறித் திரிபவர்கள் விவேகிகளா என்பதை விவேக மிகுத்தவர்களே தெரிந்துக்கொள்ளல் வேண்டும். ஓர்கால் அறிவிலிகளால் தாழ்த்தப்பட்ட மனுமக்கள் விவேகிகளால் உயர்த்தப்படுவார்கள். தாழ்த்தப்பட்டவன் உயர்த்தப்படுவானென்னும் நீதிவாக்கியமும் உண்டு.

- 4:45; ஏப்ரல் 19, 1911
 

72. நிருவாணம் என்பதென்னை ?

பாசபந்தக் கயிற்றினால் சிக்குண்டு பலவகைக் கட்டுண்டு துக்க விருத்தியிலிருக்கும் நிலைக்கு (வாணமென்னும் ) பெயராம், பாசபந்தக் கயிற்றினை அறுத்தெரிந்து நினைத்தாலும் மறத்தலுமாகிய மனமென்னும் பெயரொழிந்து தூங்கலும் விழித்தலுமாகிய நித்திறையை நீக்கி காம, வெகுளி, மயக்கமென்னும் மனமாசு கழுவி சதா விழிப்பும், சதா ஜாக்கிரமுமாகிய இதயம் சுத்தமடைந்த விடமாம். இரவு பகலற்றவிடந் தங்கி களங்கமற்றக் கண்ணாடி போல் சகலமும் தன்னுள் விளங்கப் புளியம்பழம் வேறு ஓடுவேறுபோல் ததாகதமுற்று மாறிமாறி பிறந்துழலுந் துக்கங்களற்று தானே தானே தத்துவ சுயம்பிரகாசமாய் நித்தியானந்தத்திலிருப்பதே நிருவாண மென்னப்படும். அதன் பலனோவென்னில் மறுபடியும் பிறவியால் உண்டாம் துக்கத்தை ஜெயித்துக் கொண்டான். அதே தேகத்திலுண்டாம் பிணியையும் ஜெயித்துக்கொண்டான். அதே தேகத்திலுண்டாம் மூப்பையும் ஜெயித்துக் கொண்டான். அதே தேகத்திலுண்டாம் மரணபஞ்ச அவஸ்தைகளையும் ஜெயித்துக்கொண்டான்.