பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /59

அரக்கோணத்திலுள்ள செக்கண்ட் கிளாஸ் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஏப்பிரல் மாதம் 27ம் நாள் பிரையாதை டாக்கல்செய்து ஜூன் மாதம் 28ம் நாள் வரையில் நடந்துவந்த வியாஜியத்தில் மாஜிஸ்டிரேட்டையே ஏழைக்குடிகள் தங்கள் கிராமத்திற்கு அழைத்துச்சென்று பொங்கல் வைத்த இடங்களையும் பானைகள், உடைந்து கிடப்பதையும் நேரில் பார்த்துவிட்டு வந்தும் வியாஜியத்தை தள்ளிவிட்டிருக்கின்றார்.
அந்த ஏழைக்குடிகள் வாசஞ்செய்யும் இடத்திற்கும், அரக்கோண மாஜிஸ்டிரேட் கோர்ட்டிற்கும் 28 மைல் தூரமிருக்கின்றது. இவ்வளவு தொலைவிலிருந்து ஏழைக்குடிகள் இரண்டு மாதமாக நடந்தும் அவர்களது வியாஜியம் தள்ளுபடியானது மிக்கப் பரிதாபமேயாம். மேற்சாதி என்பவர் களாலடிப்பட்டும் தங்கள் வீடுகளை இழந்தும் கூலிகளை இழந்தும் இரண்டுமாதகாலம் நடந்தும் நியாயம் கிடையாதுபோனபடியால் மேலதிகாரி களிடம் போயிருக்கின்றார்கள். விவரம் பின்னால் வெளியிடுவோம்.

- 5:4 : சூலை 5, 1911 –
 

77. தாழ்ந்த சாதியோரை வுயர்த்தப்போகின்றோமென்னும் பெரியசாதியோர் பவுஷைப் பாருங்கள்.

அரக்கோணத்தைச் சார்ந்த வளர்புரம் எனுங் கிராமத்தில் வாழும் ஏழைக்குடிகள் தங்கள் சுகத்திற்குத் தக்கவாறு வீடுகளின் முன்புறம் சிறியத் திண்ணைகள் கட்டி ஒழிந்த நேரத்தில் உழ்க்கார்ந்திருப்பது வழக்கம் அந்த சிறியத்திண்ணைகளின் மீது உழ்க்கார்ந்திருப்பதற்கு மனஞ்சகியாத பெரியசாதிகளென்போர் இப்போது சர்வே எடுக்கும் உத்தியோகஸ்தர்களைக் கொண்டு அத்திண்ணைகளை எடுத்துவிடும்படியான ஏதுக்களைச் செய்து வருகின்றார்களாம். பெரிய சாதிகளென் போர் வாசஞ்செய்யும் பெரியசாதித் திண்ணைகளை நோக்கிவரா சர்வே சிறிய சாதியார் திண்ணைகளை மட்டிலும் எவ்வகையால் உராய்ந்துவருகின்றதோ அவற்றைக் கண்டு வெளியிடுவோம். திண்ணையின் மீது உழ்க்கார மனஞ் சகியாதோர் தூக்கிவிடப்போகின்றார் களாமே.

- 5:4 ; சூலை 5, 1911 –
 

78. மெய்ப் பொருள்

வினா : தங்களரிய தமிழன் பத்திரிகையில் மெய்ப்பொருள் மெய் பொருளென எழுதிவருவதைக் காண்கின்றேன். அஃது மெய்ப்பேசுத லென்னும் ஒலிவடிமொழியா அன்றேல் குறிப்புரை பொருள் நிலைமொழியா குறிப்புரை பொருளாயின் தோற்றும் பொருளா, தோற்றாப் பொருளா இவைகளை தெளிய விளங்கும்படி வேண்டுகிறேன்.

வீ. தங்கவேலு பாம்பே.

விடை : மெய்ம்மொழி என்பது வொலிபற்றியதும், மெய்ப்பொரு ளென்பது குறிப்புரையுமே யாகும். இவற்றுள் சமண முநிவர்களின் கருத்தோ வென்னில் க்ஷணத்திற்கு க்ஷணந் தோன்றிகெடும் பொருட்களை பொய்ப் பொருளென்றும், அவனவனுக்குள் தோன்றி கெடாத பொருளை மெய்ப்பொருளென்றும் வகுத்துள்ளார்கள். பற்றற்ற நிலையாம் நிருவாணத் தில் தோன்றி கெடா உள்ளொளியாம் மெய்ப்பொருளை தன்மகாயமென்றும், உண்மெயென்றும், அந்தர் அங்கமென்றும், அத்துவிதமென்றும், அருள்வடிவென்றும், அசரீரியென்றும் வரைந்துள்ளார்கள்.
அறமென்னும் மெய்யறத்தையும், பொருளென்னும் மெய்ப்பொரு ளையும், இன்பமென்னும் மெய்யின்பத்தையுடைய வீடுபேறாம் நிருவாண முற்றோனை மெய்யனென்றும், மெய்கண்ட தேவனென்றும் மறுபிறவிக்கேகா நெறியில் நின்றவனென்றுங் கூறப்படும்.

திரிக்குறள்

கற்றீண்டு மெய்பொருள் கண்டார் தலைப்படுவர் / மற்றீண்டு வாரா நெறி.

தனக்குள் அனுபவமுங் காட்சியுமாயதே மெய்ப்பொருளாகும். மற்றவை