பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

யாவும் பொய்ப் பொருளேயாம். தன்னிற்றானே கண்டதைக் கூறுதல் மெய் மொழியாகும். காணாது கூறுதல் பொய்மொழியேயாகும்.

-5:5; சூலை 12, 1911
 

79. வைத்திய நூல்

வினா : புத்தபிரான் வைத்திய நூல் என வெளியாயிருக்கின் அந்நூலின் பெயர், விலை, கிடைக்குமிடம் முதலியவைகளை தயை பாலித்தறிவிக்க வேண்டும்.

சி. முத்துக்குமாரசாமிப்பிள்ளை , P.S.I. நாதமுநி J . தீர்த்தகிரி உபாத்தியாயர்

விடை : சாக்கைய முநிவர் தோன்றி வடமொழியின் வரிவடிவை பாணினியாருக்கும், தென்மொழியின் வரிவடிவை அகஸ்தியருக்குமளித்துப் பரவச்செய்து ஞான சுருக்கத்தையும், நீதி சுருக்கத்தையும், கணித சுருக்கத்தையும் வைத்தியமாம் ஓடதி சுருக்கத்தையுந் தனதடியார்களுக்கு விளக்கியுள்ளது வடமொழியிலுள்ள சரகநூற்களால் விளங்கும்.
ஈதன்றி பரத்துவாசரென்னுங் குன்மநோயாளருக்கு ஓடதி சுருக்கங்களை போதித்து ஓர் மலையில் வைத்தியசாலை கட்டி சகல முநிவர்களும் பழகியது கொண்டு நாளதுவரையில் அம்மலையை வைத்திய மலையென்றே வழங்கி வருகின்றார்கள்
நாம் தற்காலம் அச்சிட்டு வரும் பூர்வத்தமிழொளியாம் புத்தரது ஆதிவேதத்தில் பரத்துவாசருக்குப் போதித்துள்ள வைத்திய சுருக்கத்தை எளிதில் அறிந்துக்கொள்ளலாம்.

- 5:5; சூலை 12, 1911-
 

80. பஞ்சபாதகங்களுக்கெதிரடை பஞ்சசீலங்களேயாம்

பஞ்சபாதகங்கள் என்பவை யாதெனில் பொய் சொல்லுதற்பாவம். சீவயிம்சை செய்யுதற்பாவம், அன்னியர் பொருளை அபகரித்தல் பாவம், பிறர் மனையாளை இச்சித்தல் பாவம், மதியை மயக்கும் மதுவருந்துதல் பாவம்.
இத்தகைய பஞ்சபாதகங்களை அகற்றுவதையே பஞ்சசீலமென்னப் படும். இப்பஞ்சசீலத்தையே மந்திரமாகக் கொண்டு சிந்திப்பதும், அச்சிந்தனை மேறை நடப்பதுமே பௌத்தவுபாசகர்களின் செயலாகும். இதற்கு மேல் சத்திய சங்கத்தைச் சார்ந்து மனமாசகற்றும் அஷ்டாங்க மார்க்கத்தில் நடப்பது சமணமுநிவர்களின் செயலாகும்.
அஷ்டாங்க மார்க்கத்தில் நடந்து இராகத்துவேஷ மோகங்களாம் காமவெகுளி மயக்கங்களை அறுத்து பிறவிக்காளாக்கும் நித்திறையை நீக்கி இரவுபகலற்றவிடமாம் நிருவாணத்தில் லயித்து செல்லல், நிகழல் வருங்கால மூன்றினையும் உணர்ந்து பிறப்பினால் உண்டாந் துக்கம், பிணியினாலுண்டாந் துக்கம், மூப்பினாலுண்டாந் துக்கம் மரணத்தாலுண்டாந் துக்கங்களாகிய நான்கையும் ஜெயித்து அறஹத்துக்களென உலாவி சகல சங்கத்து சமணமுநி வர்களுக்கும் பொய்ப்பொரு ளீதென்றும், மெய்ப்பொரு ளீதென்றும் விளங்கச் செய்து பொய்யாய வநித்தியத்தை ஒழித்து மெய்யாய நித்தியத்தி னிலைத்து புத்தராவார்கள். இவர்களையே திராவிட பாஷையில் மெய்யரென்றும், மெய்கண்ட தேவரென்றும், மகடபாஷையில் புத்தரென்றுங் கூறப்படும்.
இவர்கள் என்றுமழியாது சுயம்பிரகாசமாய் அகண்டத்துலாவும் ஆனந்த நிலைக்கே புத்தேளுலகமென்றுங் கூறப்படும். நட்சேத்திரவாசிகளும் இ வர்களே. இவர்கள் வாசஞ்செய்யும் அழியா நிலைகளையே நட்சேத்திரங் களென்றுங் கூறப்படும்.
இச்செயல்களையே பௌத்தர்களின் நீதிநெறி ஒழுக்கங்களென்றும், பஞ்சசீலங்களென்றும், அஷ்டாங்கமார்க்கங்களென்றும் அழியா அட்டயோக பாக்கியங்களென்றுங் கூறப்படும். இவற்றிற்கு எதிரிடையாயச் செயலுடைய தன்மங்கள் யாவும் அதர்ம்மங்களென்றே கூறப்படும்.