பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /61

அதாவது பஞ்சசீலம் பெற்று பெளத்தனானபோதினும் கெடுதலை யாயப் பொய்யை சொல்லலாகாது. சாதாரணமானப் பொய் பேசுவதினால் என்னக் கெடுதியென்று கேட்பார்கள். அப்பியாசங் கூசாவித்தை என்பதுபோல் சாதாரணப் பொய்யே கேட்டிற்கும் பொய்யாகத் தோன்றாவோ வென்னில், ஏறுக்கு மாறாகப் பேசுவார்கள்.
கொலை செய்வதில் மனிதர்களை மட்டிலுங் கொலை செய்யலாகாது. மற்றய சீவராசிகளைக் கொலைச்செய்வதால் யாதுகேடென்பார்கள். சீவர் களைத் துள்ளத் துடிக்கக் கொலை செய்துவரும் அப்பியாசத்தால் மனுக்களைக் கொலைச் செய்வது எளிதாகுமல்லவோ வென்னில் சீவகாருண்யத்தை மறந்து கொலையை இருவகையாகப் பாவித்துப் பேசுவார்கள்.
களவு செய்யாதிருங்கோளென்பதில் ஆபத்து நேர்ந்தபோது அன்னியன் பொருளை அபகரிக்கலாமென்பார்கள். அன்னியனுக்கோர் ஆபத்து நேரிட்டு உன் பொருளை அவன் அபகரிப்பானாயின் நீவிரவனை மன்னிப்பீரோ வென்றால் மவுனஞ்சாதிப்பார்கள்.
அன்னியன் மனையாளை இச்சிக்கலாகாதென்பதில் அவளே இச்சிப் பாளாயின் யாது கேடுண்டாமென்பார்கள். அதுபோல் உன் மனையா ளொருவனை இச்சிக்க அவன் நெருங்குவானாயின் உன் மனம் சகிக்குமோ வென்னில் மாறு கூறமாட்டார்கள்.
மதிமயக்கும் மதுவை அருந்தலாகாதென்பதில் பிணியுண்டாயபோது ஏன் சாப்பிடலாகாது. சந்தோஷ காலத்தில் ஏன் சாப்பிடலாகா தென்பாரு முண்டு. பிணிகாலத்திற்கு ஒளடதமும், சந்தோஷ காலத்திற்கு ஈகையையே பெளத்ததன்மங் கூறியிருக்க பிணிக்கும் சந்தோஷத்திற்கும் மதுவை அருந்தலா மென்பது மதிமயக்கேயாம்.
பஞ்சசீலங்களை தங்களிஷ்டம்போல் பஞ்சபாதகத்துக் குள்ளாக்கி விடுகின்றவர்கள் யதார்த்த பௌத்தர்களாகமாட்டார்கள். பெளத்தத்துள் மறைந்துள்ள யதார்த்த இந்துக்களேயாவர்.

- 5:6: சூலை 19, 1911
 

81. மானிடனென்பவன் யார்

மானமீதென்றும், யீனமீதென்றும் உணர்ந்து சாந்தம், அன்பு, ஈகை இம்மூன்றையும் நிறப்புகிறவனெவனோ அவனே மானிடனாவன். அம் மூன்றும் நிறம்பியவன் தேவனாவன்.
மானமீதென்றும், யீனமீதென்றும் உணராது மிருகத்திற்கொப்பாய துற்செயலை உடையவன் மானிடருள் மிருகமேயாவன். அவன் தன்னைப் பெரியசாதியோனென்று உரைத்தபோதினும் அவன் சாதிக்கும் மானமீனமற்ற செயலால் அவன் கீழ்ச்சாதியோனேயாவன்.
அத்தகையக் கீழ்ச்சாதியாயச் செயலையுடையவன் தன்னை மேற் சாதியென எவ்வகைக் கூறி புலியானது பசுவின் தோலை மூடித்திரிவதுபோல் திரியினும் தனது குணத்தாலும், துற் செயலாலும் விவேகிகள் புலியென்று ணர்ந்துக் கொள்ளுவது போல் தங்களை மேற்சாதியென உயர்த்தி திரிந்த போதினும் அவர்களுக்குள்ள துற்குணத்தாலும், துற்செயலாலும் மிலேச்சர்களென்னும் கீழ்ச்சாதிச்செயல் தானே விளங்கிப்போம்.
தங்களுக்குத்தாங்களே பெரியசாதியென உயர்த்திக்கொண்ட போதினும் அவனது துற்செயலைக்கொண்டு மிலேச்சனென்பதும், கீழ்ச்சாதியோ னென்பதும் அவனவன் சாதிக்கும் சாதனங்களால் கீழ்ச்சாதியோனென்றே சொல்லாமல் விளங்கும்.
கொலைபாதகர்கள் யாவரும் பெரியசாதி, குடிகெடுப்போர் யாவரும் பெரியசாதி, கள்ளர் யாவரும் பெரியசாதி, குடியர் யாவரும் பெரியசாதி, விபச்சாரிகள் யாவரும் பெரியசாதி எனச் சொல்லித்திரிந்த போதினும் தன்மசாஸ்திர விதிப்படி துஷ்டச்செயலை உடையவர்கள் யாவரும் கீழ்ச்சாதி கீழ்ச்சாதிகளேயாம்.