பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

தோற்றத்தாலும், அதனதன் செயலாலும் இன்ன விட்டகுறையாதெனென்ப தினிது விளங்கும். அதனது விளக்கமும் உள்ளச் செயலறிந்த உத்தமர்க்கு விளங்குமேயன்றி உள்ளச்செயலறியா மத்திமர்க்கும் அதமர்க்கும் விளங்காது.
கன்மத்தால் விட்டகுறையே ஜென்மத்தால் விளங்குகின்றதென்பதை அமெரிக்கா தேசத்திற் பிறந்துள்ள ஓர் சிறுவன் மிக்க வாசித்தப் பிரபசர்கள் கேழ்க்குங் கேழ்விகளுக்கெல்லாந் தக்க விடைகளளிக்கக் கண்டோர் கலங்குகின்றார்களாம்.
இதுவே கல்வியில் விட்டகுறையாகும். இதன் பகரத்தை சென்னை ராஜதானியில் ஒருவன் தனது முப்பது வயதளவும் மெட்டிரிகுலேஷன் பரிட்சைக்கு முயன்றும் முடியாது விட்டுவிடுகின்றான். மற்றொருவன் பதினைந்து வயதுள் மெட்டிரிகுலேஷன் பரிட்சையை முடித்துவிடுகின்றான்.
கைத்தொழிலில் ஒருவன் விருத்தாப்பியமடைந்தும் விதரணையற்றிருக்கின்றான். மற்றொரு சிறுவன் அவ்வித்தைக்குப் போதனாபதியாகின்றான். இவைகளும் அவனவன் கன்மத்தின் விட்டகுறைகள் தொட்டு சிறுவயதிற் பிரகாசிக்கின்றார்கள். அதுபோல் ஞானவுணர்ச்சியும், ஞானசாதனமும், ஞானநிலையிலும் நின்று விட்டு மறுமெய் தோன்றியுள்ளார்க்கு உண்மெயு ணர்வும் மறுமெய்ச் செயலும் மெய்ப்பொருள் விளக்கமும் எளிதில் விளங்கும். ஞானவுணர்ச்சியும் ஞானசாதனமும், ஞானநிலையு மில்லாதார்க்கு உண்மெயுணர்வும், மறுமெய்ச்செயலும், மெய்ப்பொருள் விளக்கமும் விளங்கா தென்பது துணிபு.
ஓர் மனிதன் கற்றாராய்ந்தவனாயினும் தன்னை ஆய்ந்தடங்கிய ஞானிக்கு அவனோர் துரும்பு போன்றவனாதலின்,கண்டுபடிப்பதே படிப்பு மற்றப்படிப்பெல்லாம் தெண்டபடிப்பென்றறிந்து கலை நூல் கற்று கன்மப்பற்றற்று ஜென்மத்தை ஒழித்த சதானந்த சுயம்பிரகாசமாக விளக்கமே ஞானமென்னப்படும். மற்றவை யாவும் அஞ்ஞானம் அஞ்ஞானமேயாம். செத்தான் பிறப்பானோ பிறவானோவென்னும் வினா தோன்றில் பற்றற்றானோ மனைமகனோவென்னு மெதிர்வினாத் தோன்றி பற்றற்றா னாயின் பிறவானென்றும், பற்றுள்ளவனாயின் பிறப்பானென்றும் பௌத்த தன்ம மந்திரவாதிகள் கூறுவதியல்பாம். அங்ஙனமின்றி இனிவரும் பிறப் பென்றா லென்னையெனு மறியாவினா வெழுவியும் எப்பிறப்பென்னும் எதிர்வினாவுக்கு மிழுக்கேயாம்.

- 5:10 ; ஆகஸ்ட் 16, 1911 –
 

84. இந்திய தேச புத்ததன்மம் வேறு இதரதேச புத்ததன்மம் வேறோ

சத்தியதன்மம் சரிவரத் தெரிந்தவர்களுக்கு ஒன்றும் சரிவரத் தெரியாதவர்களுக்கு வேறுமேயாம். அதாவது கூன் குருடு சப்பாணியாகப் பிறந்து சுகயீனமடைவது துக்கம். சுகதேகியாகப் பிறந்து உண்ணச் சோற்றுக்கும், உடுக்கக் கந்தைக்கும் அலைவதுந் துக்கம். இத்தகைய துக்கம் பிறப்பினால் இல்லை யென்று ஒருவனும் மறுக்கலாகாது. பிணியினால் சயிக்கமுடியா வாதைப்படுவதோர் துக்கம் இதையு மில்லையென மறுப்பவன் ஒருவனுங்கிடையாது. மூப்பினால் தள்ளாடி தடியூன்றி தவிப்பதோர் துக்கம், இத்துக்கமுமில்லையென மறுப்பவன் ஒருவனுங் கிடையாது. அவாவினா லுண்டாயப் பற்றுக்கள் விடாது துன்பம் பெருகி கபாதி ரோகங்களால் மரணமடைவதோர் துக்கம், இதையும் மறுப்பவனொருவனுங்கிடையா.
இத்தகைய நான்குவகை துக்கத்தையும் அனுபவக் காட்சியாகக் கண்டு அதற்காய எதிரடை சுகமொன்றிருத்தல் வேண்டுமென வெளிதோன்றியவர் இராஜக்கிரக சித்தார்த்தி சக்கிரவர்த்தியேயாம். அவ்வகை வெளியேறியவர் பிறப்பு, பிணி, மூப்பு சாக்காடென்னும் நான்குவகை வாய்மெகளின் துக்கங் களையும் அத்துக்கோர்ப்பவங்களையும் அத்துக்க நிவாரணங்களையும், துக்க நிவாரண மார்க்கங்களையும் யாதோ ரோதுவானின்றி தன்னிற்றானே கண்டுணர்ந்து சகல பற்றுக்களுமற்று நிருவாணமுற்று பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்குவகைத் துக்கங்களையுஞ் செயித்து காமனையுங் காலனையும் வென்று செல்லல் நிகழல் வருங்கால மூன்றினை அறியும் இரவு