பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /71

92. டிப்பிரஸ்கிளாசை டிப்பிரஸ் கிளாசார் சீர்திருத்தல் போமோ

ஒருக்காலு மாகாவாம். அதாவது, டிப்பிரஸ் கிளாசென்பதற்குப் பொருள் தாழ்ந்தவர்கள், நசிந்தவர்கள், ஏழைகளென்னப்படும். இத்தகைய டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்த முயல்வோர் வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும், செல்வத்திலு மிகுத்த மேன்மக்கள் செய்யவேண்டியதே யன்றி மற்றும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமும் செல்வமுமற்ற ஏழைகளாகிய டிப்பிரஸ் கிளாசில் சிலர்கூடி டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்தப்போகின்றோம் பணவுதவி வேண்டுமென்னும் டிப்பிரஸ் கிளாசால் டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்தலாகாதென்பது திண்ணம் திண்ணமேயாம்.

- 5:25: நவம்பர் 29, 1911 –

93. மகா புராணம்

வினா : ஐயா, இக் கார்வெட்டி நகரிலுள்ள ஓர் பெரியவர் மகாபுராணமென்னும் ஓர் சுவடி வாசித்து வருகின்றார். அதைக் கேட்போர்களில் சிலர் புத்தர் சரித்திரமென்றும், சிலர் ஜைனர் சரித்திரமென்றுங் கூறுகின்றார்கள். அதன் விவரம் அடியேனுக்கு விளங்கவில்லை. ஆதலின் பெளத்தருக்குள் மகாபுராணமென்னும் ஏதேனும் நூலுண்டா அதை விளக்கும்படி வேண்டுகிறேன்.

வீ. பாலசுந்திரம், கார்வெட்டி நகர்.

விடை : அன்பரே! தாம் வினாவிய சங்கை விசேஷித்தன்று. ஜைனரென்பதும், புத்தரென்பதும் சித்தார்த்தியார் பெற்றுள்ள வாயிரநாமங்களைச் சேர்ந்த பெயர்களேயாம்.

பாலிசூத்திரம்
பஞ்சமாஜீனாத் தீத்திஜீனோ"

ஈதன்றி புத்தரது சரித்திரங்களில் புல்முதற் பிறப்பெல்லாங் கடந்து மானிடனாகப் பிறந்து அருள்மிகுத்து பிறப்புப் பிணி மூப்பு சாக்காடென்னும் நான்கு வாய்மெயையு முணர்ந்து அறத்தை நிலைக்கச் செய்துள்ளாரென்று கூறியவற்றிற்குப் பகரமாக;

மகாபுராணம்

கருமபூமியிற்புன் முதற் பிறப்பெலாங்கடந்து பொருவிமானிடத் தொழிலுடன் பிறந்தருள் பூத்து
மருவுகண்டுயிலிளமெமூப்பொரீ இத்தருமத்தினுரிமெயிற் செய்து மென்றிடெலறம் புரிந்தோங்கும்
போதமேவியகாதை கேட்டிருந்த வம்புரியா, ரேதமேவிய நிரயத்தினழுந்து வரியம
னாதினாட்டொடர்ந் தறமதே நோக்குவனதனாற் , பேதையீரறம் புரிந்திடுமென மறைப்பேசும்.

எனக் கூறியுள்ளவற்றால் மகாபுராணம் புத்தர் சரித்திரங்களில் ஒன்றேயாம்.

- 5:30 : சனவரி 3, 1912 –

94. மொய்

வினா : நம்மவர்களுக்குள் நிறைவேறிவரும் கலியாணத்தில் சேஷையாதி கண் முடிந்த பிறகு மணவரையில் தன்மகர்த்தா என்பவர் உட்கார்ந்து கொண்டு சலவாதியென்னு மேவலாண்மூலமாக மொய், மொய் என்றாக்கியாபித்துப் பகரவும், அச்சமயத்தில் மணமக்கட்குரிய பந்தினர்களீயுங் கட்டணத்தை தன்மகர்த்தா பெற்றுக்கொண்டு மாமிபட்டம், மைத்துனன் பட்டம், மாமன் பட்டமென்றின்னு மனேக பட்டங்களைக் கூறி பொன்னினாற் செய்த மெல்லிய தகடை வதுவையர்களின் நெற்றியில் கட்டிவரும் வழக்கம் நம் பெளத்தமார்க்கத்தின் கோட்பாடா. அன்றேல் அறஹதோ யென்ற மொழியினர்த்தந் தெரியாது பேரிலந்தங் கொட்டைகளை கழுத்திலும், கரத்திலுங் கட்டிக்கொண்டு அரகார அரகாரவென்றரையும் நூதன மதஸ்தர்களின் கற்பனையா.

சு. முனிஸ்வாமியர், இரங்கூன்.

விடை : தாம் வினாவிய சங்கை விசேஷித்ததேயாம். இத்தகைய நமது முன்னோர்கட் செயல்கள் யாவற்றையுந் தேறவிசாரித்துச் செய்தலே அழகாம். இவைகள் யாவும் பெளத்ததன்மச் செயல்களேயன்றி வேறு செயல்களன்றாம்.