பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 சுந்தர சண்முகனார்

உடுபதி = அசுவனி, பரணி முதல் இரேவதி முடிய உள்ள இருபத்தேழு விண்மீன்களும் பெண்களாம்; இவை இருபத்தேழும் சோமனின் (திங்களின்) மனைவிமார்களாம். ஏழைப் புலவர் ஒருவர் கூறியுள்ளார்: வானில் உலவும் சோமனுக்குத் (திங்களுக்குத்) தையல் (மனைவியர்) இருபத்தெழுவர் (27 பேர்); ஆனால் என் இடையில் (இடுப்பில்) உலாவும் சோமனுக்கோ (உடைக்கோ) தையல் (கிழிசல்களை மூட்டித் தைத்த தையல்) எண்ணித் தொலைக்க முடியாது- என்னும் பொருளில் ஒரு வேடிக்கைத் தனிப் பாடல் கூறியுள்ளார்.

வான் உலாவும் சோமனுக்கோ தையல் இருபத்தேழு
என் இடை உலாவும் சோமனுக்கோ தையல் எண்ணித் தொலையாது

என்பது பாடல் பகுதி. சில விண்மீன்களின் கணவன் திங்கள் என்னும் பொருளில் திங்களை உடுபதி' எனக் கம்பர் குறிப்பிட்டுள்ளார் என்பது இதனாலும் புலனாகும்.

கடல்கள்

சமுத்திரத்தைக் குறிக்கப் பரவை, உவரி, கடல், பெளவம் என்னும் சொற்கள் உள்ளன. பரதனுடன் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாள் படை என்னும் கடல் போன்ற நான்கு பெரும் படைகளும் சென்றனவாம். ஒவ்வொரு படையையும் முறையே பரவை, உவரி, கடல், பெளவம் என்னும் சொற்களால் கம்பர் குறிப்பிட்டிருப்பது சுவையாயுள்ளது. பாடல்:

தேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக் கார்மிசைச் சென்றது ஓர் உவரி, கார்க் கடல் ஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும்
பார்மிசைப் படர்ந்தது பதாதிப் பெளவமே

(32)