பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 165


அதன் நடுவில் மை என்று சொல்லப்படுகின்ற நஞ்சைத் தீட்டி, இவற்றை அப்படியே திங்களின் நடுவே வைத்தாற் போன்ற தோற்றம் உடைய மங்கையர், துவளும் இடையுடன் மயில் குழாம்போல் வந்து குழுமினர்-இராமனது முடிசூட்டைக் கொண்டாட -

குவளையின் எழிலும் வேலின் கொடுமையும் குழைத்துக் கூட்டி
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினைத் தெரியத் தீட்டி
தவள ஒண் மதியுள் வைத்த தன்மைசால் தடங்கண் நல்லார்
துவளும் நுண் இடையார் ஆடும் தோகையம் குழாத்தின் தொக்கார்

(74)

திங்களின் சுற்றுப்புறம் வெண்மையாயும் நடுப்பகுதி களங்கம் என்னும் கருநிறத்ததாயும் இருப்பது போலவே, பெண்களின் கண்களின் சுற்றுப்புறம் வெண்மையும் நடுப் பகுதி (பாப்பா என்பது) கறுப்பாயும் இருப்பதைக் காணலாம். அந்தக் கருநிற நடுப்பகுதியிலே நஞ்சு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, பெண்களின் பார்வை ஆண்களை நஞ்சுபோல் துன்புறுத்துகிறது என்பது உள் கருத்து.

கானம் புக்கான்

தயரதனின் அழைப்பின் பேரில் இராமன் தன் மாளிகையிலிருந்து தெருவில் தேர்மேல் செல்கின்றான். அந்தக் காட்சியை மகளிர் காண்கின்றனர். பெண்களின் தோள்கட்கு மூங்கிலும் கண்கட்கு வேலும் ஒப்புமை. காட்டில் மூங்கில் இருக்கும்- போர் மறவர்கள் போட்டுவிட்டுப் போன வேலும் இருக்கும். எனவே, இராமன் கைகேயியால் உண்மையான காட்டுக்குப் போகுமுன்பே, இந்த மூங்கிலும் வேல்களும் நிறைந்த காட்டினிடையே சென்றதாகக் கம்பர் கற்பனை செய்து உள்ளார்.

துண்ணெனும் சொல்லாள் சொல்லச் சுடர்முடி துறந்து தூய
மண்ணெ னும் திருவைநீங்கி வழிக்கொளா முன்னம் வள்ளல்