பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 171



ஒருவில் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே!
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி
அருவி நீர்கொடு வீசத் தான் அப்புறத்து ஏறிக்
கருவி மா மழை உதிர்ப்ப தோர் கடுவனைக் காணாய்

(14)

கடுவனும் கொடிச்சியும்

மலைவாழ் மக்கள் தினைப் புனக் காவலுக்காக ஒரு கடுவன் (குரங்கு) பறையை எடுத்து அடிக்கிறதாம். கொடிச்சி (மலைவாழ் மகள்) ஒருத்தி, மலை உச்சியில் உள்ள திங்களின் நடுவே இருக்கும் கறையாகிய களங்கத்தைத் துடைக்கிறாளாம்:

அறைகழல் சிலைக் குன்றவர் அகன் புனம் காவல்
பறை எடுத்து ஒரு கடுவன் கின்று அடிப்பது பாராய்
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா
கறை துடைக்குறு பேதைஓர் கொடிச்சியைக் காணாய்

(22)

குரங்கு பறை அடித்தும் இருக்கலாம். ஆனால், கொடிச்சி திங்களின் கறையைத் துடைப்பது என்பது முற்றிலும் கற்பனையே. பேதை கொடிச்சி' என்று பாடியுள்ளார் கம்பர். பேதை என்னும் சொல்லுக்குப் பெண் என்ற பொருளும் அறிவிலி என்ற பொருளும் உண்டு என்பது ஈண்டு எண்ணத் தக்கது.

குண்டிகைச் சொரிவன

மிகவும் மூப்படைந்து தளர்ந்த தவத்தோர்க்காக, யானைகள் தம் தும்பிக்கையில் நீர் உறிஞ்சிக் கொணர்ந்து குண்டிகையில் சொரிகின்றனவாம்.

அளவில் மூப்பினர் அருந்தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து
களப மால் கரி குண்டிகைச் சொரிவன காணாய்

(29)

இது ஒரளவு உண்மையாகவும் இருக்கலாம்- அல்லது கற்பனையாகவும் இருக்கலாம்.