பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184 - சுந்தர சண்முகனார்


முத்து மாலைகள் தொங்கவிடப்பட்டன. அவர்களின் மார்பகங்கள் போல் (பூரணப்) பொற் குடங்கள் வைக்கப் பட்டன:

மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள்
அங்கவர் கழுத்தெனக் கமுகம் ஆர்ந்தன தங்கொளிர் முறுவலின் தாமம் நான்றன கொங்கையின் நிரைந்தன கனக கும்பமே

(38)

வாழையைப் பெண்களின் துடைக்கும், கமுகைக் கழுத்திற்கும், முத்தைப் பல்லுக்கும், குடத்தை மார்பகத்திற்கும் ஒப்புமையாகக் கூறுவது வழக்கம். இங்கே, துடை வாழைக்கும், கழுத்து கமுகிற்கும், பல்வரிசை முத்துக்கும் மார்பகம் குடத்திற்குமாக- அப்படியே தலைகீழாய் மாற்றி உவமிக்கப்பட்டுள்ளன.

மாலை நல்கினாள்

கைகேயியிடம் கூனி வந்து, இராமனுக்கு முடி சூட்டாம் என்றதும், கைகேயியின் அன்பு என்னும் கடல் ஆரவாரித்ததாம்; தேய்வு இல்லாத முகமாகிய திங்கள் ஒளியுடன் விளங்கித் தோன்றிற்றாம்; ஞாயிறு முதலிய சுடர்கட்கெல்லாம் தலைமை என்று சொல்லத்தக்க அளவு ஒளி வீசும் பொன் மணிமாலை ஒன்றைக் கைகேயி அளித்தாளாம்:

ஆய பேர் அன்பெனும் அளக்கர் ஆர்த்தெழத் தேய்விலா முகமதி விளங்கித் தேசுறத்
தூயவள் உவகை போய் மிகச் சுடர்க்கெலாம் நாயகம் அனையதோர் மாலை நல்கினாள் (

60)

அன்பு கடலாகவும் முகம் மதியாகவும் உருவகிக்கப் பட்டுள்ளன. தேயாத மதி இல்லை; எனவே, தேயாத மதி என்பது இல்பொருள் உவமை.