பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188 சுந்தர சண்முகனார்


நகர் நீங்கு படலம்

மாலும் சிவமும் தழுவல்

அளப்பரும் பெருமைமிகு திருமாலும் பொன்மான் உரியுடைய சிவனும் தழுவிக்கொண்டதுபோல் இராமனும் இலக்குமணனும் தழுவிக் கொண்டனராம்:

அன்னான்தனை ஐயனும், ஆதியோடு அந்தம் ஒன்றாம்
தன்னாலும் அளப்பரும் தானும் தன் பாகம் நின்ற பொன்மான் உரியானும் தழீஇ எனப் புல்லிப் பின்னை
சொன் மாண்புடைய அன்னை சுமித்திரை கோயில் புக்கான்

(138)

கரிய திருமால்போல் இராமன் கருநிறத்தான்; பொன்னிறச் சிவன்போல் இலக்குவன் பொன்னிறத்தான். எனவே ஒப்புமை பொருந்தும். திருமாலின் வலப்பக்கத்தே சிவன் இருப்பதாக ஆழ்வார்கள் கூறியுள்ளனர்; திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி என்னும் திவ்வியப் பிரபந்த நூலிலுள்ள

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரம்மனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து

(3-4-9)

என்னும் பகுதியும், பொய்கையாழ்வாரின் இயற்பாமுதல் திருவந்தாதியிலுள்ள

பொன்திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகம் தாய நெடுமாலும்- என்றும்
இருவரங்கத் தால்திரிவ ரேலும் ஒருவன் ஒருவன்அங்கத் தென்றும் உளன்

(98)

என்னும் வெண்பாப் பாடலும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன. இருவரும் ஒருவர் உடம்பிலே இன்னொரு வராயும் இணைந்துள்ளனர். இதனால்தான், தானும் தன் பாகம் நின்ற பொன்மான் உரியானும் என்று பாடினார். இந்த வடிவம் 'சங்கர நாராயணன்' எனப் படும். பல ஊர்களில், ஒரே கோயிலுக்குள் சிவன்