பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206 - சுந்தர சண்முகனார்


மனம் உடையவர்க்கு அல்லாமல் மற்றவர்க்குத் தெரியாது- என்கிறான்:

தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் அருமை என்பது பெரிது, அறிதி ஐய நீ
இருமையும் தருவதற்கு இயைவது, ஈண்டு இது தெருள் மனத்தார்க்கு அலால் தெரிதற் பாலதோ?

(6)

இப்பாடலின் இறுதிப் பகுதி வேற்றுப் பொருள் வைப்பாகும்.

திருவடி சூட்டு படலம்

கால வலை

இராமனை அழைத்துவரப் பரதனுடன் காடு ஏகிய வசிட்டன் காட்டில் இராமனைக் கண்டு கூறுகிறான். நல்லொழுக்கமும் நல்லறமும் கொண்ட இராம! சிவன், திருமால், நான்முகன் ஆகியோராலும் காலம் என்னும் வலையைக் கடக்க முடியாது; எனவே, நடந்தது நடந்து போயிற்று. இனி நீ நாட்டுக்கு வந்து முடிசூடிச் கொள்ள வேண்டும் என்கிறான்:

சீலமும் தருமமும் சிதைவு இல் செய்கையாய் சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய
மூலம் வந்து உதவிய முவர்க் காயினும்
காலம் என்றொரு வலை கடக்கல் ஆகுமோ?

(73)

சீலமும் தருமமும் சிதையாதவன் என்று கூறியதால், முறைப்படி நீ நாடாள்வதே அறமாகும் என்பது குறிப்பாய் அமைந்துள்ளது. சிவன் சூலமும் திருமால் ஆழியும் (சக்கரமும்) நான்முகன் சொல்லும் தாங்கி யுள்ளனர். சொல் என்பது, ஈண்டு, சொல்லுக்கு (கல்விக்கு) உரிய கலைமகளைக் குறிக்கிறது. இப்பாடலின் இறுதிப் பகுதியாகிய 'காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ' என்பது வேற்றுப் பொருள் வைப்பு அணியாகும்.