பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அயோத்தியா காண்ட ஆழ் கடல் 207


மேலுள்ளவாறு, ஒரு நிகழ்ச்சியை விளக்கி, அதன் வாயிலாக மற்றொரு (வேறொரு) பொதுக் கருத்தை விளங்க வைத்துள்ளார் கம்பர். இந்த வேற்றுப் பொருள் வைப்புத் தொடர், ஒரு பொது நீதி வாக்கியம் போல் உள்ளது பயன்தரத் தக்கதாகும்.

தற்குறிப் பேற்ற அணி

அடுத்துத் தற்குறிப் பேற்ற அணி குறித்துப் பார்க்க லாம். ஒரு பொருளின் நிகழ்ச்சி இயல்பாக- இயற்கையாக நிகழ, புலவன் அதை விட்டு, இன்ன காரணத்தால் இது நிகழ்கிறது என்று ஒரு காரணத்தைத் தற்குறிப்பாக (தனது கருத்தாக) ஏற்றி உரைப்பது தற்குறிப்பு ஏற்ற அணியாகும். 'பெயர் பொருள் அல்பொருள் என இரு பொருளினும் இயல்பின் விளை திறன் அன்றி அயலொன்று தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்' என்பது தண்டியலங்கார நூற்பா. இனிச் சில எடுத்துக்காட்டுகள் காண்பாம்:

கைகேயி சூழ்வினைப் படலம்

கங்குல் நங்கை

இவ்வளவு நாள் கணவனோடு இருந்து விட்டு, இப்போது இரண்டு வரம் பெற்றுக் கணவனை மயங்கச் செய்த கைகேயி என்னும் இரக்கமில்லாப் பெண்ணின் செயலைக் கண்டு ஆடவர் முன் நிற்கவும் வெட்கப்பட்டு மறைந்தவள் போல் கங்குல் (இரவு) என்னும் பெண் மறையப் பொழுது விடிந்ததாம்.

சேண் உலாவிய நாளெலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின்
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா
வாணிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர்முன் நிற்கவும்
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குலாகிய நங்கையே

(50)