பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218 - சுந்தர சண்முகனார்


விட்டாரோ! நெருப்பு கக்கும் நம் அம்புகள் அவர்மேல் தைக்காவோ! இவர் இங்கிருந்து தப்பி இராமனை நோக்கிச் சென்றுவிடின் என்னை நாய்க் குகன்' என்று எல்லாரும் ஏசாரோ!

பரதனின் படையை வென்று, அறவோராகிய இராமரே ஆளும்படி வேடுவர் படை மீட்டுத் தந்தது என்னும் புகழை அடைய வேண்டாவா? நாடு கொடுத்த இராமற்கு, இவர்கள், காட்டில் இருக்கவும் இடம் தராமல் படையெடுத்து வருவதைப் பாரீர்:

அஞ்சன வண்ணன் என்ஆருயிர் நாயகன் ஆளாமே வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரோ செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ உஞ்சு இவர் போய்விடின் நாய்க்குகன் என்று எனை ஒதாரோ?

(14)

ஆடு கொடிப்படை சாடி அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது பார் எனும் இப்புகழ் மேவீரோ நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர்நாம் ஆளும் காடு கொடுக்கில ராகி எடுத்தது காணிரோ?

(22)

கம்பர், இராமனையே அவன்- இவன் என்பது போல ஆண்பால் ஒருமையில் கூறியிருக்க, இங்கே குகன் கூறுவதாக, 'மன்னரும் வந்தாரோ' எனப் பரதனைச் சிறப்புப் பன்மையால் குறிப்பிட்டிருப்பது மிகவும் சுவையானது. அதாவது- ஒ- ரொம்ப பெரியவர் இவர்- இவர் வந்து விட்டாரோ எனத் தம்மினும் தாழ்ந்தவரை ஒருவர் விடைப்பது போல, 'மன்னரும் வந்தாரோ' எனக் குகன் பரதனை விடைப்பதாக உள்ளது இந்தத் தொடர். மேவீரோ- காணிரோ என்பன மற உரைக் குறிப்பாகும். பாடல்களைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்துக் கருத்து நயத்துடன் ஒலி நயத்தையும் சுவைக்க வேண்டும்.

விம்முற்றான்

பரதனது தவக் கோலத்தைக் கண்டு தன் பழைய எண்ணத்தை மாற்றிக் கொண்டு குகன் எண்ணுகின்றான்!