பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 சுந்தர சண்முகனார்


நீங்கள் நெடுங்காலம் வாழ வேண்டும் என வாழ்த்தியது. இப்பாடலில், முதல் தொடங்கி இறுதிவரை, கம்பர், நைவீர், அலீர், மைந்தீர், நீவிர், ஐவீர், ஒருவீர் என, முன்னிலைப் பன்மைப் பொருண்மையைக் கட்டிக் காத்திருப்பது நயமாயுள்ளது.

பிரியாதானைப் பெற்றவள்

குகன் சுமித்திரையைச் சுட்டிக் காட்டி யார் என்று வினவப் பரதன் கூறுகிறான்: நேர்மையைக் காத்த மன்னனின் இளைய தேவி- இராமனுக்குப் பின் பிறந்த தம்பியும் உண்டு என்று சொல்லும்படி என்றுமே இராமனைப் பிரியாதிருக்கிற இலக்குவனைப் பெற்ற பெரியவள்- என்று அறிமுகம் செய்தான்:

அறம் தானே என்கின்ற அயல் நின்றான்
தனைநோக்கி, ஐய, அன்பின்
நிறைந்தாளை உரை என்ன, நெறி திறம்பாத்
தன் மெய்யை நிற்ப தாக்கி
இறந்தான் தன் இளந்தேவி; யாவர்க்கும் தொழுகுலமாம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான்தனைப்
பயந்த பெரியாள் என்றான்

(67)

சுமித்திரை அன்பு நிறைந்த நெஞ்சத்துடன், அறம் என்பது 'தான்தான்' என்று சொல்லும்படி நின்றிருந் தாளாம். இங்கே, சுமித்திரையை 'அறம்தானே' என அறத்தின் உருவாகக் கூறியிருப்பதில் உள்ள பொருத்தம் என்ன? அவள் பெற்ற இலக்குவன் இராமனுடன் காடு ஏகுமுன் அவளிடம் விடைபெறச் சென்றான். அவள், * அடே பைத்தியக்காரா : எவனாவது எங்கே இருந்தால்- எங்கே போனால் உனக்கு என்ன? இராமனுடன் காட்டிற்குச் சென்று நீ ஏன் அல்லல்பட வேண்டும்? நீ உன் நலத்தைக் கவனி என்றெல்லாம் கூறினாளா?* நகர் நீங்கு படலம்-147.