பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அயோத்தியா காண்ட ஆழ் கடல் 23

இவ்வாறே இதன் பிற்புலம் அமைந்துள்ளது. பரதன் சத்துருக்கனனுடன் அயோத்தியை விட்டு அப்பால் உள்ள நந்தியம் பதியில் பதினான்காண்டு தவக் கோலத்துடன் காலம் கழித்தான் அல்லவா?

நாடு கடத்தல்

கூனியின் தூண்டுதலின்படி, கைகேயி, ஒரு வரத்தால் பரதனுக்கு முடியைப் பெற்றாள்; சரி- இராமனை மற்றொரு வரத்தால் பதினான்காண்டுகள் நாடு கடத்தியது எதற்காக? இவ்வாறு செய்தது, இராமனால் பின்னால் தொல்லை ஏற்படாதிருக்கவே யாம். நாடு கடத்திவிடின் தொல்லையில்லையன்றோ?

உலக வரலாறுகளைப் புரட்டிப் பார்ப்போமாயின், நாடு கடத்தலின் நோக்கம் நன்கு புரியும். உலக வரலாற்றில் அன்று தொட்டு இன்றுவரை, எத்தனையோ நாடு கடத்தலைக் கண்டிருக்கிறோம். இளங்குமணன் தன் அண்ணன் குமணனது ஆட்சியைப் பறித்துக்கொண்டு அவனை நாடு கடத்திய செய்தி நாம் அறிந்ததே.

இங்கிலாந்தில் இரண்டாம் ரிச்சர்டு மன்னன் (King Richard-11) ஆண்டு கொண்டிருந்தபோது, தன் பங்காளிப் பகைவனாகிய பாலிங்புரோக் (Boling broke) என்பவனை நாடு கடத்திய செய்தியை, சேக்சுபியரின் King Richard-11 என்னும் படைப்பைப் படித்தவர்கள் அறிவர். பகைவன் வெளிநாட்டில் இருந்தால் தன்னை ஒன்றும் அசைக்க முடியாது- என்பது இதன் கருத்து. இதே அடிப்படையில் ஒன்று நிகழ்ந்தது. இங்கிலாந்திலிருந்து ரிச்சர்டு மன்னன் மேலாட்சியைக் கவனிக்க அயர்லாந்துக்குச் சென்றிருந்த போது, வெளிநாட்டில் இருந்த பாலிங்புரோக் இங்கிலாந்துக்கு வந்து ஆட்சியைப் பிடித்துக் கொண்டு, அயர்லாந்து சென்றிருந்த ரிச்சர்டு மன்னனைச் சிறையில் அடைத்துப் பின் கொன்றே விட்டான். பகைவன் வெளியில் இருக்கும் போது எளிதில் காரியம் முடித்துக் கொள்ளலாம் என்பதை இது அறிவிக்கிறதல்லவா?