பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 - சுந்தர சண்முகனார்

உன்னைத் துன்புறுத்தியவர் யார்?- உன் உடைமையைப் பறித்தவர் யார்?- என்பது போலத் தயரதன் சொல்ல வில்லை. உன்னை இகழ்ந்தவர் யார் என்றுதான் கேட்டான். அவ்வாறே அவளை உலகம் இன்றளவும் இகழ்ந்து கொண்டிருக்கிறது.

இராமன்மேல் ஆணை

கைகேயி தயரதனை நோக்கி, எனக்கு முன்பு இரண்டு வரங்கள் தருவதாகக் கூறினீர்களே- அவற்றை இப்பொழுது தருவீர்களா?-என்று வினவினாள். அதற்கு மன்னன், ஒ! தருவேன்- மறுக்க மாட்டேன்- வஞ்சிக்க மாட்டேன். உன் மகன் இராமன்மேல் ஆணை:- என்று பதிலிறுத்தான்:

உள்ளம் உவந்தது செய்வென் ஒன்றும் உலோவேன்
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான்

(11)

இது பாடல் பகுதி. உள்ளம் உவந்தது செய்வேன் என்பதை உள்ளம் உவந்து அது செய்வேன் எனப் பிரித்து, மனம் விரும்பி, நீ கேட்ட அதைச் செய்வேன் என்று பொருள் கொள்வர். இதில் மற்றொரு மறை பொருள் உள்ளது. உவந்தது என்பதை உவந்து + அது என்று பிரிக்காமல், என் மனம் விரும்பியதைச் செய்வேன் என்பதே அம் மறைபொருள். தயரதன் உள்ளம் உவந்தது இராமனுக்கு முடிசூட்டுவதுதான். அதைச் செய்வேன்- நீ மறுக்காதே- விட்டுக்கொடுஎன்னும் பொருள் மறைந்திருக்கிறது. மேலும் இராமனை, உன் மகன் இராமன்' எனக் கைகேயியின் மகனாகக் கூறுகிறான். அப்படித்தான்- அவள் உண்மைத் தாயாக இருந்தவள் இப்போது மாறிவிட்டாள். இராமன் மேல் ஆணை என்பது இராமனது முதன்மைச் சிறப்பைக் குறிக்கிறது. ஆனால் இன்னும் சிறிது நேரத்தில், இராமன், கைகேயியால் செல்லாக் காசாக ஆக்கப்படப் போகிறான். படிப்பவர்கட்டு இஃதும் ஒரு முன்னோட்டச் சுவைதானே!