பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 - சுந்தர சண்முகனார்

மண்ணை (ஆட்சியை) வேண்டுமானால் பெற்றுக் கொள்! ஆனால் இராமனைக் காட்டுக்கு அனுப்பாதே- என்ற கொடிய செய்தியை வாயால் சொல்லவும் உள்ளம் இடம் தராமல், மற்றையது ஒன்று' என மறைமுகமாகக் குறிப் பிடுகின்றான்- அதை மறந்தே விடு- என்கிறான். இஃதும் ஒருவகைச் சுவையன்றோ?

கைகேயியின் காலில் விழல்

சிற்றரசர்கள் பலர் ஒருவரோடொருவர் போட்டி போட்டு முந்திக் கொண்டு வந்து தயரதன் காலில் விழுவார்களாம். அத்தகைய பெருமைக்கு உரிய தயரதன் இப்போது கைகேயியின் காலில் விழுந்து சிறுமை எய்தினானாம்.

கால்மேல் வீழ்ந்தான் கந்துகொல் யானைக் கழல் மன்னர்
மேல்மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான்

(29)

விரைவின் போதுதி

கைகேயியிடம் அடைக்கலம் (சரணாகதி) அடைந்த தயரதனைத் தேடிக் கொண்டு கைகேயியின் இருப் பிடத்திற்கு வந்த சுமந்திரனை நோக்கி, இராமனை அழைத்துவா எனக் கைகேயி ஆணையிட்டாள். உண்மை அறியாத சுமந்திரன் இராமனிடம் சென்று கூறுகிறான்: உலகத்தவர் உன்னைப் பெற்றவனைப் போலவே உன் மேல் பெரும் பரிவு கொண்டுள்ளனர். உன் சிற்றன்னை கைகேயியோ, (விரைவில் உனக்கு மகுடம் சூட்டு வதற்காக) உன்னை அழைத்துவரச் சொன்னாள். எனவே, முடி சூடிக் கொள்வதற்காக நீ விரைவில் புறப்படுவாயாக!- என்றான்.

கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்து உள்ளோர் உன்னைப்
பெற்றவன்தன்னைப் போல பெரும் பரிவு இயற்றி நின்றார்
சிற்றவைதானும் ஆங்கே கொணர்க எனச் செப்பினாள் அப்
பொன்தட மகுடம்சூடப் போதுதி விரைவின் என்றான்

(85)