பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 சுந்தர சண்முகனார்



கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை (சிலப்பதிகாரம்,6-121)

விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பை (மணிமேகலை,16-122, 123)

முதலிய அகச் சான்றுகளால் குப்பையின் உயர்வு புலப்படும். இந்த அடிப்படையுடன் கம்பரிடம் வருவோம். பல வகையான கலைகளைக் குறிக்கக் கலையின் குப்பை' என்று குறிப்பிட்டுள்ளார் கம்பர். குப்பையின் வரலாறு இது.

மருத்துவன் இயல்பு

அமைச்சர்கள் அரசனுக்கு நல்லவை எவை, தீயவை எவை-என ஆய்ந்து அதற்கேற்பச் செயல்படுவார்களாம். இங்கே, பிணியாளிக்கு நல்லது எது- தீயது எது எனக் கண்டுபிடித்து அதற்கேற்ப மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் அமைச்சர்கட்கு ஒப்புமையாக்கப்பட்டுள்ளமை, சுவையாயுள்ளது.

நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு
எல்லையில் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்

(9)

என்பது பாடல் பகுதி. ஈண்டு,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்

(948)

என்னும் திருக்குறட்பா ஒப்பு நோக்கத் தக்கது.

கண்ணும் உள்ளமும்

தயரதன் இராமனை அழைத்து வருமாறு சுமந்திரனை அனுப்பினான். சுமந்திரன் இராமன் அரண்மனைக்குச் சென்று, தன் கண்ணும் உள்ளமும் தேன் உண்ட வண்டு போல் களிப்புறும்படி இராமனைக் கண்டான். பாடல் பகுதி: