பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 - சுந்தர சண்முகனார்

கேட்ட அசுண மாக்கள் இன்புடன் கண் வளர் கின்றனவாம்.

குனிந்த ஊசலில் கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி கனிந்த பாடல் கேட்டு அசுணமா வளர்வன காணாய்

(24)

என்பது பாடல் பகுதி. இங்கே அசுணத்தை மா (விலங்கு) எனக் கம்பர் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் யாழ்

புல்லாங் குழலை விட, யாழை விட, இனிமையாகச் சொல் பேசும் கிளியே என இராமன் சீதையை விளிக்கின்றான்:

குழுவு நுண் தொளை வேயினும் குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே

(28)

என்பது பாடல் பகுதி. தமிழ் யாழ் என்பதில் பல கருத்துகள் அடங்கியுள்ளனவாகக் கொள்ள இடம் உண்டு. தமிழ் என்ற சொல்லுக்கு 'இனிமை' என்னும் பொருள் உண்டு என்பதற்குப் பல இலக்கியச் சான்றுகள் உண்டு. ஒன்றே ஒன்று பார்ப்போமே! தமிழ் தழிஇய சாயலார் அதாவது இனிய நடையையுடைய பெண்டிர்- என்னும் பொருளில் திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணி என்னும் நூலில் அமைத்துள்ளார். எனவே, இனிய யாழ் என்பது ஒரு கருத்து. வீணை வட நாட்டது; யாழ் தமிழ் நாட்டது என்னும் ஒரு கருத்தும் குறிப்பாகக் கொள்ளப்படலாம். நகர் நீங்கு படலத்தில், இராமனைக் கம்பர், தென்சொல் கடந்தான் வடசொற் கலைக்கு எல்லை தேர்ந்தான் (136)

எனக் குறிப்பிட்டிருப்பது கொண்டு, இராமன் தமிழ் அறிந்தவனாய் இருக்க வேண்டும் என உய்த்துணர இடம் உண்டு. அதனால்தான், இராமன் வாயால் 'தமிழ் யாழ்' எனக் கம்பர் சொல்லவைத்துள்ளார் போலும்.