பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 - சுந்தர சண்முகனார்

நெல் பயிர், தொடக்கத்தில், பச்சைப் பாம்பின் தோற்றம் போல் கருக் கொண்டு, இழிந்த செல்வர் போல் தலைநிமிர்ந்து நின்று, கருமுற்றிக் காய்ந்தபின், தேர்ந்த கல்வியாளர் போல் தலைதாழ்த்திக் கிடக்கிறதாம். (சொல்=நெல்)

சொல்அரும் பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந் தீன்று மேலளார்
செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே

(53)

என்பது பாடல். 'அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்' என்பது வெற்றி வேற்கை (14)

முகத் தாமரை

ஞாயிறு மறைந்ததும், தடாகங்களில் தாமரைகள் குவிந்தன; வெள்ளாம்பல்கள் மலர்ந்தன. இதைக் கம்பர் நயப்படுத்திக் கூறுகிறார். தாமரை மலர்கள் பெண்கட்குத் தமது தோற்றத்தை அளித்துவிட்டு மறைந்தனவாம். வானம் போன்ற வாவியில் உடுக்களைப் போல் வெள்ளை ஆம்பல்கள் மலர்ந்தனவாம்:

ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரைப்
பூ கணி முகிழ்த்தன, புலரி போனபின்
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ
வான் எனும் மணித் தடம் மலர்ந்த எங்குமே

(40)

என்பது பாடல். தாமரை மலர்கள் போல் பெண்களின் முகங்கள் உள்ளன என்னும் பழைய கருத்தையே புதுமைப் படுத்திக் காட்டியுள்ளார் கம்பர். இரவில் மலரும் வெள்ளை ஆம்பல், வெண்மையாய் இருப்பதற்குக் காரணம், வண்டுகளை ஈர்த்துப் பிற மகரந்தச் சேர்க்கை பெறுவதற்கேயாம். இருளில் வெள்ளைதானே கண்ணுக்குப் பளிச்செனத் தெரியும்?