பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 83

செவித்தேன்

பரதன் காட்டிற்குச் சென்று இராமனை அழைத்து வரப் போகிறான்; இராமன் முடிசூடிக் கொள்வான் என்று கூறிப் பறையறைந்ததும், அச் சொற்களைக் காதால் கேட்டா எல்லா உயிர்களும் மகிழ்ந்தனவாம். இராமன் வந்து முடிசூடிக் கொள்வான் என்ற சொல் செவி வழியாகச் சென்று இனிக்கச் செய்யும் தெய்வத் தேனோ- என்று பாராட்டப்படுகிறது:

அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள
புவித்தலை உயிரெலாம் இராமன் பொன்முடி கவிக்கும் என்றுரைக்கவே களித்ததால் அது
செவிப் புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம்

(23)

என்பது பாடல். வாயால் உண்ணும் தேனின் சுவையையும் மூளைதான் நுகர்கிறது; செவியால் கேட்கும் தேன் போன்ற சொல்லின் இனிமையையும் மூளைதான் நுகர்கிறது. எனவே, மகிழ்ச்சியூட்டும் சொற்களைச் செவிப் புலத்தேன்' என்று கூறியிருப்பது சாலப் பொருந்தும்.

மெல்லியல்

இராமனை அழைத்து வரப் பரதனுடன் படைஞர் களும் பொது மக்களும், திக்குகள் சிறியவாயுள்ளன நாம் போவதற்குப் போதுமான அகலம் உள்ளவையா யில்லை என்று சொல்லிக் கொண்டு சொல்லொணாத பெருங் கூட்டமாய்ச் சென்றனராம். இவ்வளவு பெரிய சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கும் மண்ணை (பூமியை) ஒரு பெண் என்று சொல்லியுள்ளனர். பெண்களை மெல்லியர்' எனல் மரபு. அங்ங்னமெனில், இவ்வளவு பெரிய சுமையைத் தாங்கும் பூமியையும் ஒரு மெல்லியல் (மென்மைத் தன்மையுடைய பெண்) என்று கூறியவர் வல்லவர் அல்லர்- மெலிந்த தன்மை உடையவரே என்று எண்ணத் தோன்றுகிறதாம்.