பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 93

பட்டிருந்ததாம்- என்று சுமந்திரன் கூறினான். அதாவது, அவர்களின் முகக் குறிப்பு உடன்பாட்டை அறிவித்ததாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்னும் முன்னோர் மொழியும்,

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (706)

என்னும் குறட்பாவும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன. மற்றும், உலகியலில், ஒருவர் மற்றொருவரை நோக்கி 'நீ இப்பேர்ப்பட்டவன் என்று உன் முகத்தில்- நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறதே என்று கூறும் வழக்காறும் ஈண்டு எண்ணி மகிழ்தற்கு உரியது. பாடல்:

பழுதில் மாதவன் பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான்
முழுதும் எண்ணுறும் மந்திரக் கிழவர் தம் முகத்தால் எழுதி நீட்டிய இங்கிதம் இறை மகற்கு ஏற்கத் தொழுத கையினன் சுமந்திரன் முன் நின்று சொல்லும்

(44)

கொடிய அறம்

சில நேரங்களில் அறம் கொடியதாய்த் தோன்று மாம். சுமந்திரன் கூறுகிறான்: இராமனுக்கு முடிசூட்டு என்ற செய்தியால் உண்டாகும் குளிர்ச்சியை, தயரதனைப் பிரிதல் என்னும் நெருப்பு சுடுகின்றதாம். என் செய்வது! "தந்தைக்குப் பின் மைந்தன்' என்பது தொன்று தொட்டு வரும் அறமாயிற்றே. அங்ங்னமெனில், இத்தகைய அறத்தைவிடக் கொடியது வேறொன்றும் இருக்க முடியாது என்கிறான். உண்மையில் அறம் கொடியதன்று. ஈண்டு அவ்வாறு கூறியிருப்பது ஒருவகை எதிர்மறைப் புது நோக்காகும் பாடல்:

உறத்தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை
துறத்தி நீ எனும் சொல் சுடும்; நின்குலத் தொல்லோர்
மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று;
அறத்தி ன்னூங்கு இனிக் கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ?

(45)