பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 95

கடனும் நீதியும்

முடிசூடிக் கொள்வதற்கு இராமன் உடன்பட்டான் என்பதைக் கூறவந்த கம்பர் ஒரு தொடரில் அதைச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் அவர் அதை எவ்வாறு கூறுகிறார்?:- முடிசூடிக்கொள் என்று சொன்னதும், இராமன், விருப்போ வெறுப்போ கொள்ளவில்லை; இது தனது கடமை என்றும், தந்தையும் அரசனுமாகியவர் கூறுவதை ஏற்பதே அறம் என்றும் கருதி உடன்பட்டானாம்.

தாதை அப்பரிசு உறை செயத் தாமரைக் கண்ணன் காதல் உற்றிலன் இகழ்ந்திலன்; கடன் இது என்று உணர்ந்தும்,
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ நீதி எற்கு என நினைந்தும் அப்பணி தலைநின்றான்

(69)

சீதையின் சிறந்தன

தன்னிடம் வந்த சிற்றரசர்களை நோக்கித் தயரதன், இராமனுக்கு முடிசூட்டப் போகிறேன் என்று நேரில் வெளிப்படையாய் அறிவிக்கவில்லை. 'இராமனுக்கு அரசச் செல்வமும் நாடும் சீதையைப் போலவே சிறந்தனவாகப் போகின்றன என்கிறான். சீதையை அடைந்தது போலவே, திருவும் பூமியும் அடையப் போகிறானாம். பாடல்:

நிருபர் கேண் மின்கள் இராமற்கு நெறி முறைமையினால்
திருவும் பூமியும் சீதையின் சிறந்தன என்றான்

(73)

இராமனுக்கு முடிசூட்டுவதற்கு உடன்படுகின்றோம் என்று மன்னர்கள் கூறியதைக் கம்பர் நயம்படப் பின்வருமாறு கூறியுள்ளார்: ஊரார் நீர் உண்ணும் ஊருணி நிறைவதையும், பயன் மரம் பழுப்பதையும், முகில் மழை பெய்வதையும், கழனிக்கு நீர் பாய்ச்சும் ஆற்றில் தண்ணிர் நிறைவதையும் கூடா என மறுப்பவர் யார்? யாரும் இலர். அதுபோலவே இராமனது முடிசூட்டை,