பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


பழமையில் மனிதனுக்கு இனிமையென்றால், இறந்த காலத்தில் ஐக்கியமாகிவிட்ட ஒரு பிணத்தை - நாறுவதற்கு முன்னாலே ஏன் தூக்கிக் கொண்டு ஒடுகிறான் அவன்?

பழமை மீது உனக்குத் தணியாத காதல் இருப்பதில் தவறில்லை. ஆனால், உன் வீட்டைப் புதுப்பிக்கின்றாயே - ஏன்?

வீட்டைப் புதுப்பிக்க மனம் உடைய மனிதனே!

நாட்டைப் புதுப்பிக்க மறுப்பது நியாயமோ!

புதுமைக் கண் கண்டு அந்த நாட்டின் இலக்கியத்தை நோக்கல் புன்மையோ?-கேட்டார் பாரதியார் தலைப் பாகையை வரிந்து கட்டிக் கொண்டே!கேளாக் காதினராயினர் கேலி பேசியோர்!

தமிழ் இலக்கிய உலகில் "பாஞ்சாலி சபதம்" போன்ற புதிய முயற்சியில் ஈடுபட்ட அவரை, அன்றைய தினம் ஊக்குவிக்கத் தமிழகம் தவறி விட்டது.

தமிழனே - தமிழ்ச் சிந்தனைக்கு பகையானான். பிள்ளையே - தாய்க்குப் பகையானது! தனயனே அலட்சியக் குழி வெட்டினான் தனது தந்தைக்கு:

வானத்தில் எரியும் நெருப்புபோல - சுடர்வீசி நிற்கும் நாட்டுணர்வுக்கு, காற்றிலே கலந்த மோன கீதமாய், தூபமாய் - அமைந்தது பாரதியாருடைய தேசிய பாடல்கள் என்ற விடுதலை கீதங்கள்!

அடக்கு முறையால் அவரை அடக்கிட நினைத்தவர்கள் - சாக்காடு போகும்மட்டும் எதிர்க் கரம் தூக்கினார்கள். அதனால், தனது விடுதலை உழைப்புக்குத் தோழமை கிடைக்காதா என்று அவர் ஏங்கினார்!

விடுதலை வேட்கை மூலம் பைந்தமிழ்த் தேரை வழி நடத்திச் செல்லும் பொறுப்பு - பாரதியாருக்கு ஏற்பட்டது.

அன்று அலர்ந்த அழகுத் தமிழில் - தீவிர நாட்டுப் பற்றெனும் தமிழ்த்தேனை உண்ணும் வண்டானார் பாரதியார்!

அடிமை மடிமை என்ற ஊஞ்சலில் துயில் கொண்ட தேச பக்தர்களுக்கு- அவர், விழிப்புணர்ச்சியை ஊட்டிடும் விடுதலை முரசமானார்!

100