பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


தீர்க்கமான முடிவுகள் வெளியே வருகின்ற நேரத்தில், அடக்க முடியாத நம்பிக்கை, வட திசையில் இருக்கின்ற துருவ நட்சத்திரத்தைப் போல இருக்கின்றது.

நான் இந்தத் தரைத் திட்டிலிருந்து உன்னைப் பார்க்கின்ற நேரத்தில் நீ விழுந்த நிலை, ஒரு பணக்காரன் ஏழைக்குப் போடுகின்ற பிச்சைக் காசைப் போல - நழுவிக் கீழே விழுந்தது தெரிந்தது.

ஏ, விண்மீனே, மனிதனுடைய அனுபவத் துளிகள், அவன் இறந்த பிறகு வெளியே மடித்து வைக்கப்படுகின்றது.

அதை, உயிரோடு இருக்கின்ற எந்த மனிதனும் உடுத்துவதில்லை.

உலகம் தோன்றியது முதல் இன்று வரையில் இதுபோன்ற அனுபவங்கள் வெளியே மூட்டை மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருக்கின்ற போது, மனிதன் தவறுகளைச் செய்து ஏன் எரி நட்சத்திரம் போல் அழிந்து விடுகின்றான்?

சுய சிந்தனை இருக்கின்ற மனிதன், மற்றவருடைய சிந்தனையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தினாலா?

விளங்காத ஆசைக்கு விடியும் வரை காத்திருந்த ஒருவன், கிடைக்காத காரணத்தால், கலங்கிப் போகின்றான்.

அந்தக் கலக்கத்தோடு காலத்தின் கணக்கை முடித்துக் கொள்கின்றான்.

இப்போது அவனுடைய அனுபவத் துணி வெளியே கிடக்கின்றது - அனாதையாக!

பின்னால் வருகின்ற ஒருவன், இது யாருடைய துணி என்று கூடப் பார்க்காமல், அதன் மீதே நடந்து செல்கிறான்.

புதிய அனுபவங்கள் அவனுக்குக் கிட்டுகின்றன. பழைய அனுபவங்கள் கீழே கிடக்கின்றன.

மாறி, மாறி,-மரணத்தின் ராட்டினத்தில் குந்தித்தலை சுற்றிக் கீழே சாய்கின்றான்.

எந்த அனுபவமாக இருந்தாலும் சரி, அது பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வரை - காதல் அனுபவமாகவே இருக்கும்.

116