உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யன் திருவள்ளுவரில்
தமிழஞ்சலி

முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்

உளம் நினை மணம் தரு மலர் (மனோரஞ்சித மலர்) என்ற ஒன்று உண்டு. அதை எடுத்துக் கொண்டு, நாம் எந்த மலரின் மனத்தை விரும்புகிறோமோ அம் மணத்தை அது கொடுக்குமாம். மல்லிகையை நினைத்தால் மல்லிகை மணம், உரோசாவை நினைத்தால் உரோசா மணம், என எல்லா நறுமண மலர்களின் மனத்தையும் அது நல்குமாம். பல்வேறு நறுமண மலர்களின் கலவை மணமாக, மிகச் சிறந்த மணமாக அது விளங்குகிறது என்பதை, இவ்வாறு பெருமைபடக் குறிப்பிடுவர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு மனோரஞ்சித மலர். ஆற்றல்மிகு பேச்சாளர், அழகு தமிழ்க் கட்டுரையாளர், சிந்தை பள்ளும் சிறுகதை எழுத்தாளர், புகழ்மிக்க புதின ஆசிரியர், நயமிகு நாடக ஆசிரியர், அறிவு நலஞ்சான்ற அரசியலாளர், பார் போற்றும் பண்பாளர்- என, யார் எந்நிலையில் நோக்கினாலும் அவ்வந்நிலையில் மிக உயர்ந்தவராகக் காட்சியளிப்பவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

புலவர் என்.வி. கலைமணி அவர்கள், அண்ணாவைக் காலமாக, ஞாயிறாக, நிலவாக, வானவில்லாக, அருவியாக, தென்றலாக என இயற்கைப் பொருள்களாகக் கண்டு, அவ்வியற்கைப் பொருள்களின் தன்மைகளை அண்ணா பெற்றிருக்கும் பாங்கினைக் கூறுகின்ற புகழ் மொழிகளே 'தமிழஞ்சலி என்னும் இந்நூலாக உருவாகியுள்ளது.

எழுதுவோர் பல வகையினர். ஒரே பொருளை நோக்குவோர் தம் கருத்துக்கு ஏற்ப வெவ்வேறு வகையிலே அதனை எழுதுவர் என்பதை அண்ணா, ஒர் அருமையான எடுத்துக் காட்டுத் தந்து விளக்குகிறார்."குதிரை என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதச்-

10