புலவர் என்.வி. கலைமணி
அய்யன் திருவள்ளுவப் பெருந்தகையார் குறட்பாவிலே வந்துள்ள "தூங்காமை” என்ற சொல்லுக்கு, சிலர், உறங்கக் கூடாது என்று பொருள் கொள்ளுகின்றார்கள். தவறான வாதம் அது.
"தூங்குதல்” என்றால், சோம்பியிருத்தல் என்றும் பொருள்படும். தூங்காமை என்றால், எடுத்த பணியை விரைவாகக் கருத்துான்றி, விழிப்போடு பணியாற்றல் என்பதே, அந்தச் சொல்லுக்குரிய அறிவாட்சியாகும்.
ஏனென்றால், மடி மிடியை விளைவிக்கும். அதனால் குடி கெடும். அடியோடு அதனை அகற்றினால் சிந்தனை சிறக்கும். - அறிவு சுரக்கும். ஞானம் முகிழ்க்கும் - ஞாலம் உய்யுமல்லவா?
வானம் வரவேற்கும் வாயிலுக்கு மக்களை அழைத்துச் செல்லும் கடமைகளை ஆற்றும் நமது சுவாமிகளுக்குத் தூங்காமை இல்லை. கடலளவு ஞானக் கல்வியும் உண்டு.
எண்ணத் துணிவுகளால் சில வேளைகளில் அரசுக்கும் கூட அவர் அருட்பாலித்து அறிவுறுத்துவதை நாம் பார்க்கின்றோம்.
எனவே அந்த மகான் மன்னுயிர்க்கு மனநலம் ஊட்டுகிறார். 'சித்தமே மனிதனது சத்து என்று தாயாக அரவணைத்துப் பேசுகின்றார். பணியாற்றுகின்றார்.
அறிவாலே சிலர் ஒழுக்கம் வளர்வதாக நம்பலாம். மனம்தானே ஒழுக்கத்தின் விளைநிலம்?
அதனால், இனிய மனதை மக்கட்கு வழங்கிட, அரும்பாடு படுகின்றவர் நமது மாமுனிவர் அருட்திரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆவார்.
1967 -ல் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் தலைமையுரை ஆற்றிப் பேசும்போது, பேரறிஞர் அண்ணா அவர்கள், "மயங்காதே தமிழா, தயங்காதே தமிழா” என்று குறிப்பிட்டார். ஏன்?
'காலம் கடந்து விட்டது என்றோ, வசதிக் குறைவுகள் என்றோ, எதையும் செய்திட மனம் மருகி மயங்காதே! எண்ணியதைத் திண்ணியதாக்கித் தயங்காமல் துணிந்து செய்” என்றார்.
143