பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


ஆனால், திருக்குறளின் எழுத்துக்களில், நீண்ட காலச் சரித்திரமோ, குறுகிய கால இலக்கியமோ தெரிவதற்குப் பதில், இனி முட்டைக்குள் முட்டையாக இருந்து முகிழ்ப்பதற்குக் காலம் பார்த்துக் கொண்டிருக்கின்ற மனித வர்க்கத்தை, நீ இப்படித்தான், இருப்பாயென்று, அறுதியிட்டு உறுதியாகச் சொல்லுகின்ற ஆற்றல் - அந்த நெசவாளிக்கு மட்டும் எப்படி முடிந்தது?

அவருக்கென்று ஒரு மதம் இல்லை, அவ்வளவுதானே ஒழிய, வேறு என்னவாக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இத்தகைய அய்யன் திருவள்ளுவரை இந்த ஆய்வு மாநாடு என்ற போர்க்களத்தில் நீங்களும் சந்திக்கின்றீர்கள் - புலவர் தெய்வநாயகமும் சந்திக்கின்றார்.

நீங்கள் இருவரும், காலமாகிக் காணாமல், கலந்த காற்றிலே அய்யன் திருவள்ளுவரைத் தேடுவதற்காக முனைகின்றீர்கள்.

பார்வை ஒழுங்காக இருப்பவர்களுக்கு பாதாளம் தெரியும்' என்றான் அரிஸ்டாட்டில்.

திருக்குறள் ஆழத்தை நோக்கி இறங்குவதற்கு வந்திருக்கின்ற தண்டமிழ்ச் சான்றோர்களே !

உங்கள் முன்னால் விரிக்கப்பட்ட ஆறு கிறித்துவப் புத்தகங்கள் வழியாக, நீங்கள் உதிர்க்கின்ற கருத்துக்கள், இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவரைக் காட்டுவதற்காகவாவது அமைய வேண்டும் என்பது என் போன்றோரின் ஆசையாகும். பல நூற்றாண்டுகட்கு ஒரு வள்ளுவராகப் பிறப்பவர் தான் திருவள்ளுவர்!

இது வரையில், கடவுள் தான் நினைவில் நிற்பவன் என்று தத்துவங்கள் கூறுகின்றன.

வேதங்களையும் - அதற்குச் சாட்சியாகக் கோயிலையும் - பூசையையும் காட்டுகின்றனர் வேதாந்திகள்!

அருள் கூர்ந்து, நீங்கள் அய்யன் திருவள்ளுவரைக் கோயிலில் இல்லா இறைவனாக, பூசையில்லா இறைவனாக, மனித நேய மனிதத்தில் மணக்கும் மனமாகக் காட்ட வேண்டுமென்று விரும்புகின்றேன்.

166