பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


உண்டாலும் இனிப்பு மாறாதிருப்பது போல, இவர் எழுதத் தொடங்கிய நாள் தொடங்கி இப்பொழுது வெளிவரும் இந்நூல் வரை என்றும் குன்றா இளமையும் எழிலும் இனிமையும் நிறைந்த தமிழ்வளம் பாய்ந்து பெருகி பரவி வருதல் கண்டு உவந்துள்ளேன்.

தலைப்புக்குரிய தகைசான்ற கருத்துச் செறிவும் சொல்லாட்சித் திறனும் படைத்துப் பறிமாறும் பக்குவமும் இவருக்கு வாய்த்த நற்பேறுகள் என்று துணிந்து கூறலாம். நல்லவகை பயின்று, நாள்தோறும் நற்றமிழ்த் தொண்டு புரிந்து வரும் இவர் தமிழ் உலகில் இன்னும் உயரிய, உரிய இடம் பெறாமைக்கு என்ன காரணம் என்பது சிந்திக்க வேண்டும்.

வண்ணத் தமிழ் பூஞ்சோலையாகவும், உண்ண உண்ண இனிக்கும் தமிழ்க் கனிகளையுடைய பழந்தோப்பாகவும் - குற்றால மலையின் கொட்டும் நீர் வீழ்ச்சியாகவும் - செந் தமிழ்க்காடு முழுதும் மனங்கமழும் சந்தன அடவியாகவும் - அலைக் கொழித்து, அருந்தமிழ் முத்துக்களை வாரி இறைக்கும் அற்புதக் கடலாகவும் - இந்நூல் திகழ்கின்றது என்றால் அது மிகையில்லை.

பொதுமறை அருளிய"அய்யன் திருவள்ளுவர்” பற்றிய முதற் கட்டுரை நல்ல தொடக்கம். கிறிஸ்தவர்கள் நடத்திய திருக்குறள் ஆய்வு மாநாட்டில் இவர் ஆற்றியுள்ள வரவேற்புரை இவர்தம் ஆழ்ந்த ஆய்வுக்கும் அஞ்சா நெஞ்சுக்கும் சான்றாக விளங்கு கின்றது.

'புரட்சிக் கவிஞர்' பாவேந்தர் பாரதிதாசனார் பற்றி இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் 'பாரதிதாசன் பேசுகிறேன்' என்ற கட்டுரை பாவேந்தரின் பாடல் தொடர்களைக் கொண்டே நன்கு வேயப்பட்டுள்ளது

'உலக உத்தமர்' காந்தியடிகளும், அமெரிக்க காந்தி மார்ட்டின் லூதர் கிங் அவர்களும், அமரகவி பாரதியாரும், இவர் எழுத்தில் ஏற்றமான தோற்றம் காட்டுகிறார்கள்.

கவியரசு கண்ணதாசன் பற்றி இடம் பெற்றுள்ள கட்டுரை தரமான ஆய்வுரை. ஐந்து இரவுகள் இமை மூடாதிருந்து இவர் எழுப்பியுள்ள கற்பனைச் சிற்பக் கோபுரங்கள் கன்னித் தமிழுக்கும் நமக்கும் நல்விருந்தாகின்றன.

30